அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை! தர்மம் வென்றுள்ளதாக கேபி முனுசாமி பேட்டி

அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேபி முனுசாமி தர்மம் வென்றுள்ளதாக கூறியுள்ளார்.
அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் போன்றவற்றை பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எத்தனை முறை வழக்கு தொடருவீர்கள்? நேரம் கேட்பீர்கள்? எத்தனை முறை ஒரே வாதத்தை முன்வைப்பீர்கள்? என ஓபிஎஸ் தரப்பை கடிந்துகொண்ட நீதிபதிகள், ஏற்கனவே பல நீதிமன்றங்கள் உங்களது வாதங்களை ஏற்கமறுத்த பின், எப்படி அதிமுக கட்சி பெயரை பயன்படுத்துகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினர். ஏற்கனவே அதிமுக வழக்கு தொடர்பாக நீதிமன்றங்களில் ஓபிஎஸுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், இது அவருக்கு மற்றொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுகவின் துணை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள், கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த எவ்வித தார்மீக உரிமையும் இல்லாதவர்கள். அவா்கள் கட்சியை அழிக்கவும், குழப்பத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டு செயல்பட்டு வந்தனர். இதனால் எதிர்கட்சி தலைவரும், கட்சியின் பொது செயலாளருமான பழனிசாமி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் எங்களுக்கு நீதி கிடைத்துள்ளது., தர்மம் வென்றுள்ளது” என்றார்.