எந்த அடிப்படையில் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு?- கே.பி.முனுசாமி கேள்வி

எந்த அடிப்படையில் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு என்பது தெரியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கே.பி.முனுசாமி கூறியதாவது: எந்த அடிப்படையில் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு என்பது தெரியவில்லை. நடிகராக இருக்கக்கூடிய விஜய் செல்லும் இடங்களில் கூட்டம் சேரலாம். கூட்டம் சேரலாம் என்ற அடிப்படையில் Y பிரிவு பாதுகாப்பு வழங்கியிருந்தால் மகிழ்ச்சி. விஜய்யை தன் பக்கம் இழுப்பதற்காக பாதுகாப்பு கொடுக்கப்பட்டதா? பா.ஜ.கவின் வரலாறு எது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதாவால் நிராகரிக்கப்பட்டு போயஸ் தோட்டத்திற்கு வரக்கூடாது என ஒதுக்கி வைக்கப்பட்டவர் தினகரன். ஒரு கட்சியை துவக்கி அமைப்புகளை உருவாக்கிவிட்டு தனியாக அரசியல் செய்யும் தினகரனுக்கும் அதிமுகவுக்கும் என்ன தொடர்பு? அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச எந்தவித தகுதியும், தார்மீக உரிமையும் டிடிவி தினகரனுக்கு இல்லை. அரசியல் ரீதியாக எதிர்கட்சியாக எதிர் அணியாக எங்களை விமர்சிக்கலாம். ஆனால் எங்களுடன் இணைவோம் என்று சொல்வதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை என கூறினார்.