கோயம்பேடு பார் தகராறு விவகாரம்: பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு..!
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யான்சி (18) என்கிற இலங்கை தமிழ் பெண் சென்றுள்ளார். தனது தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் சென்ற அவர், அங்குள்ள பாரில் நடனம் ஆடியதாக கூறப்படுகிறது.
அப்போது நடனமாடுவதில் இவர்களுக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதையடுத்து, பாரில் இருந்த பவுன்சர்கள் இரு தரப்பினரையும் வெளியேற்றியுள்ளனர்.
ஆனால், வெளியே சென்ற பிறகும் அவர்களுக்கு இடையே சண்டை மூண்டுள்ளது. பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இருதரப்பினரையும் விலக்கிவிட்டு அவர்களை அங்கிருந்து அனுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, யான்சி மற்றும் அவரது 17 வயது தோழியும் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து சென்றுள்ளனர்.
அப்போது, எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் சென்ற கார் மீது யான்சி தரப்பினர் கல் எறிந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தங்களின் காரை வேகமாக ஓட்டிச் சென்று யான்சி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதினராம்.
இதில் யான்சி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு 17 வயது சிறுமி படுகாயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரை கோயம்பேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சம்பவம் நடந்த தனியார் மதுபான பாரின் உரிமமும் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யான்சியின் தோழியான 17 வயது சிறுமி இன்று உயிரிழந்தார். இதனால் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கில் மற்றொரு கொலை பிரிவையும் சேர்த்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

