அம்பேத்கரை விமர்சித்த அமித்ஷா- வாயை திறக்காத எடப்பாடி! பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க திட்டமா?
அண்ணல் அம்பேத்கரை விமர்சித்த அமித்ஷாவை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. பழனிசாமி அவர்கள் நேரடியாக கண்டிக்காதது ஏன்? என அமைச்சர் கோவி. செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணல் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அவர்களை, #INDIA கூட்டணி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்துச் சனநாயகச் சக்திகளும் கண்டித்திருக்கும் வேளையில், அ.தி.மு.க. தலைமை மவுனம் காப்பது ஏன்? அண்ணல் அம்பேத்கரை விமர்சித்த அமித்ஷாவை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. பழனிசாமி அவர்கள் நேரடியாக கண்டிக்காதது ஏன்?
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், அமித்ஷா அவர்களுடன் சேர்ந்து அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கிறாரா? இல்லை அமித்ஷாவின் கருத்தை ஆமோதிக்கிறாரா? அண்ணா.தி.மு.க. அமித்ஷா.தி.மு.க. என மாறிவிட்டதால்தானே அண்ணல் அம்பேத்கர் விஷயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமைதி காக்கிறார். மீண்டும் பா.ஜ.க.வோடு கூட்டணி சேரும் முயற்சிகளில் அவர் மும்முரமாக இருக்கிறார். “அ.தி.மு.க. அழியாமல் இருக்க வேண்டுமென்றால், பா.ஜ.க. கூட்டணிக்கு வர வேண்டும்” என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்திருந்தார். “அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைப்பீர்களா?” என்ற கேள்விக்கு “இல்லை” என்று பதில் சொல்லாமல் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “பொறுத்திருந்து பாருங்கள்” என சிக்னல் காட்டியிருக்கிறார். அதனால்தான், கூட்டணிக்கு எங்கேயும் பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக அம்பேத்கர் அவமதிப்பைக் கண்டிக்கத் துணிவில்லாமல் இருக்கிறாரா எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.