ரீல்ஸ் மோகம்- கொள்ளிடம் நேப்பியர் பாலத்தின் மீது ஏறி வித்தைக்காட்டிய இளைஞன்

 
இளைஞர்

ரீல்ஸ் மோகத்தால் கொள்ளிடம் பாலத்தின் மேல் சிமெண்ட் கட்டையில் ஆபத்தான முறையில் தண்டால் எடுக்கும் இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது.


திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே நேப்பியர் வடிவில் கொள்ளிடம் பாலம் உள்ளது. இந்த பாலமானது திருச்சி மாநகரையும், புறநகரையும் இணைக்கும் முக்கியமான பாலமாகும். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் கொள்ளிடம் பாலத்தின் மேல்பகுதியில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் மோகத்தால் இளைஞர் ஒருவர் தண்டால் எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த கொள்ளிடம் பாலத்தின் மேல் பகுதியில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் இளைஞர்கள் ஆபத்தான முறையில் மேலிருந்து 60 அடி கீழ்ப்பகுதியில் இருக்கும் தண்ணீரில் ஆபத்தான முறையில் இளைஞர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு குளித்தனர். இதில் ஒரு சிறுவன் உயிரிழந்தும் உள்ளார். 

தற்போது இளைஞர் ஒருவர் கொள்ளிடம் பாலத்தின் மேல் நடுப்பகுதி சிமெண்ட் தடுப்பில் ஆபத்தான முறையில் தண்டால் எடுக்கும் வீடியோ வைரலாக வருகிறது. கொள்ளிடம் பாலம் பாதி மாநகரம், பாதி பாலம் புறநகருக்கு உட்பட்டதால் மாநகர காவல் துறை மற்றும் புறநகர காவல் துறையினரும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.  இதற்கு சமூக ஆர்வலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கொள்ளிடம் பாலத்தின் நடுப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஆனாலும் ரீல்ஸ் மோகத்தால் இளைஞர்கள் இதுபோன்ற ஆபத்தான முறையில் ஈடுபடுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.