கொல்கத்தா வழக்கு - உண்மை கண்டறியும் சோதனை
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி என சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் கடந்த 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராய் (33) கைது செய்யப்பட்டு, அவரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி என சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உட்பட 5 மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ மனு அளித்துள்ளது. சிபிஐ மனுவை விசாரித்த சியால்தா நீதிமன்றம், உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.