“4,000 கோடி ரூபாய் செலவு செய்தது இதற்குத்தான்”- கே.என்.நேரு

 
nehru

சென்னை மாநகராட்சிக்குத் திராவிட மாடல் அரசு என்ன செய்தது என்று திட்டமிட்டுப் பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து, “ரீல்ஸ்” விடுவோருக்கு, ஆட்சியிலிருந்து நாங்கள் நிகழ்த்திய “ரியல்” சாதனைகள் புரியவில்லை  என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

KN Nehru speech


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று முன்தினம் சென்னை மாநகரில் பெய்த கனமழையால் தேங்கிய மழைநீர், திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொண்ட பல்வேறு மழைநீர் வடிகால்கள் அமைக்கும் நடவடிக்கைகளின் காரணமாக உடனடியாக வெளியேறி, சென்னைவாழ் மக்களின் பாதிப்பைப் பெருமளவில் குறைத்துள்ளது. இதை நடுநிலையாளர்கள் உணர்கிறார்கள். சென்னைவாழ் பெருமக்கள் புரிந்துகொண்டு பாராட்டுகிறார்கள். ஆனால், திராவிட மாடல் அரசிற்குக் கிடைத்துள்ள பாராட்டுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத த.வெ.க.வினர், சமூக வலைதளங்களில் “4,000 கோடி ரூபாய் செலவு செய்தது இதற்குத்தானா?” என்ற அளவில் முகாந்திரமில்லாத வெட்டி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.திராவிட மாடல் அரசில் எண்ணற்ற திட்டங்கள் சென்னை மாநகரத்திற்காக நிறைவேற்றப்பட்டன. ஆட்சிக்கு வந்தவுடன் திருப்புகழ் கமிட்டியை அமைத்து, அதன் பரிந்துரைகளைப் பெற்று, அவற்றுள் இடைக்காலப் பரிந்துரைகளை உடனே நிறைவேற்றிய அரசு, எங்கள் அன்றைய முதலமைச்சரும் இன்றைய கழகத் தலைவருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் அரசு என்பதை இந்த நேரத்தில் உறுதிபடத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். திராவிட மாடல் அரசு சென்னை மாநகருக்கு மட்டும் நிறைவேற்றிய திட்டங்களில் சிலவற்றை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கடந்த ஐந்தாண்டுகளில் 1,000 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை முடித்தோம். மீதமுள்ள பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன! கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் மட்டும் 600 கிலோமீட்டருக்கு மேல் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டன. 37 நீர்வழிக் கால்வாய்களில் வெள்ளத் தடுப்புச் சுவர்களின் உயரத்தை அதிகரித்து, வெள்ள அபாயத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், வெள்ளநீர் தேங்குவதைத் தவிர்க்கவும் 770 இடங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றில் கொசஸ்தலையாறு, கோவளம் வடிநிலப் பகுதிகளும் அடக்கம்! சென்னை மாநகராட்சியில் உள்ள 60 நீர்நிலைகளைப் புனரமைக்கவும், தூர்வாரவும், கரைகளைப் பலப்படுத்தவும், நீர் சேமிப்புத் திறனை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வந்ததும் திராவிட மாடல் அரசுதான்! விடுபட்ட மழைநீர் வடிகால் இணைப்புப் பணிகள், நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் பணிகள், கோவளம் வடிநிலப் பணிகள், கொசஸ்தலையாறு வடிநிலப் பணிகள், டிரஸ்ட்புரம் கால்வாய்ப் பணிகள், கடப்பாக்கம் ஏரி மேம்பாடு, அடையாறு ஆற்றுப் புனரமைப்பு, ஓட்டேரி நல்லா மற்றும் விருகம்பாக்கம் கால்வாய்கள் புனரமைப்பு, தூர்வாரும் பணிகள் எனவும், வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்புகள் மற்றும் பேரிடர் மீட்பு, நிவாரண மையம் அமைக்கும் பணிகள் எனவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, சென்னை மாநகருக்குக் கனமழைகளால் ஏற்படும் பாதிப்புகளை அடியோடு நீக்கத் தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களை நிறைவேற்றியதும், களப்பணியாற்றியதும் எங்கள் ஆட்சிதான்! இந்தச் சாதனைத் திட்டங்களால் ஓரிரவில் பெய்த கனமழையால் தேங்கிய நீர், அந்த இரவு விடிவதற்குள் வடிந்திருக்கிறது! கழக அரசு கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் நிகழ்த்திக் காட்டியுள்ள சரித்திரம் இது!

சென்னை மாநகராட்சிக்குத் திராவிட மாடல் அரசு என்ன செய்தது என்று திட்டமிட்டுப் பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து, “ரீல்ஸ்” விடுவோருக்கு, ஆட்சியிலிருந்து நாங்கள் நிகழ்த்திய “ரியல்” சாதனைகள் புரியவில்லை என்றே தெரிகிறது. கனமழை என்றாலும், வெள்ளம் என்றாலும் முதலில் ரிப்பன் மாளிகைக்கு வந்து ஆய்வு செய்பவராக எங்கள் முதலமைச்சர் இருந்தார். வெளியூர்ச் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இரவில் திரும்பினால்கூட நேராக ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறைக்கு வந்து ஆய்வு செய்யும் நிர்வாகத் திறமைக்குப் பெயர் பெற்றவர் எங்கள் அன்றைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். இப்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ரிப்பன் மாளிகைக்குச் சென்று ஆய்வு செய்திருக்கிறார். அதன்பிறகு பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் ஐ.ஏ.எஸ். அவர்கள், “கடந்த காலங்களில் இருந்ததைவிட இப்போது மழைநீர் தேங்கி நிற்கும் இடங்கள் குறைந்துள்ளன” என்று கூறியிருக்கிறார். இதுதான் எங்கள் ஆட்சியின் சாதனைக்கு எடுத்துக்காட்டு! மேலும், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ககன்தீப் சிங் பேடி அவர்கள்தான் இப்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கிறார். அப்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த திரு. குமரகுருபரன் தற்போதும் தலைமைச் செயலகத்தில் அரசுச் செயலாளராகத்தான் இருக்கிறார். ரிப்பன் மாளிகைக்குப் போன மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் கேட்டாலே, கடந்த ஐந்தாண்டு காலத்தில் சென்னை மாநகராட்சியில் திராவிட மாடல் அரசால் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட வெள்ளத் தடுப்புப் பணிகள் அனைத்தையும் மிக எளிதாகப் பட்டியலிட்டுச் சொல்வார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்னொன்று, திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரைகள் மீது ஏதோ எங்கள் அரசில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற தவறான பிம்பத்தைத் திட்டமிட்டுத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார்கள். அது தவறு! திருப்புகழ் கமிட்டி கொடுத்த பரிந்துரைகளில் இடைக்காலப் பரிந்துரைகள், நீண்டகாலத் திட்டங்களுக்கான பரிந்துரைகள் என்ற அடிப்படையில் இருவிதமான பரிந்துரைகள் இருந்தன. அவற்றில் இடைக்காலப் பரிந்துரைகளை முதலில் நிறைவேற்றிய அரசுதான் திராவிட மாடல் அரசு. சட்டமன்றத்திலேயே நான் இதுகுறித்துப் பேசும்போது, “திருப்புகழ் கமிட்டியின் இடைக்காலப் பரிந்துரைகளை நிறைவேற்றியுள்ளோம். நீண்டகாலப் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்குள் தேர்தல் வந்துவிட்டது” எனக் கூறி, “இப்போதும் அறிக்கை அரசிடம்தான் இருக்கிறது. தாராளமாக அந்த நீண்டகாலத் திட்டங்களை நிறைவேற்றலாம்” எனக் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.திருப்புகழ் கமிட்டியின் நீண்டகாலப் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டியதும், ஏற்கெனவே திராவிட மாடல் அரசில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால் கால்வாய் பணிகள் உள்ளிட்ட சென்னை மாநகராட்சியின் உட்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடர்ந்து கண்காணித்து நிறைவேற்ற வேண்டியதும் த.வெ.க. அரசின் பொறுப்பு என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்குச் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.