பாமகவுக்குள் நிலவும் பிரச்சனை திமுகவுக்கு கூடுதல் பலம்- கே.என்.நேரு

 
KN Nehru speech KN Nehru speech

அதிமுக ஆட்சி அமைந்தால் அமைச்சரவையில் பிஜேபியும் பங்கு என்றதால், அதிமுக தொண்டர்கள் சோர்ந்து போயுள்ளனர். திமுக கூட்டணி சலசலப்பில்லாமல் ஒற்றுமையுடன் உள்ளது என அமைச்சர் கே.என்.நேரு கூறினார். 

அரியலூர் மாவட்ட திமுக சார்பில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான திமுக வாக்குச்சாவடி முகவரி கூட்டம் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.  இதில் திமுக மத்திய மண்டல பொறுப்பாளரும் , திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், “இரண்டு மாதம் முன்பு வரை வருகின்ற தேர்தல் சவால் நிறைந்ததாக இருக்கும் என நினைத்தோம். தற்போது நமது கூட்டணியில் எந்தவித சஞ்சலமும், சலசலப்பும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். ஆனால், எதிரணியினர் அப்படி அல்ல. பிஜேபி கூட்டணியில் இணைந்தவுடன், அதிமுக தொண்டர்கள் மனம் சோர்ந்து விட்டனர். ஆட்சி அமைந்தால், அந்த அமைச்சரவையில் பிஜேபியும் பங்கு பெறும் என்று பாஜகவினர் சொல்லினர். ஆகையால் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லாத நிலை உள்ளது. பாமகவினருக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக, நமக்கு ஒரு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த அரியலூர், பெரம்பலூரில் அது நமக்கு ஒரு கூடுதல் பலம். பாஜகவினர் தாங்கள் தேர்தலில் வெல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், திமுக வெல்லக் கூடாது என நினைக்கின்றனர். அதனால் தான் நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகின்றனர். நாளையே முதல்வர் ஆகிவிடுவது போல் நான் உங்களோடு வரவில்லை, அவர்களோடு செல்லவில்லை என கூறிக் கொண்டுள்ளார். அதற்கெல்லாம் நாம் கவலைப்பட தேவையில்லை” என்றார்.