அமைச்சர்களையும், அதிகாரிகளையும் ஓடவைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்

 
KKSSR

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓடுவதால் தான் நாங்கள் ஓடிக் கொண்டிருக்கிறோம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் கூறியுள்ளார். 

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னை மண்ணடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு ’எங்கள் மேன்மை இறையாண்மை நல்லிணக்க’ அரங்க துவக்கவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சேகர்பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே..எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது:  சேகர்பாபுவை பார்த்து எங்களுக்கு பொறாமையாக உள்ளது. ஒரு மனிதன் எவ்வாறு எந்நேரமும் உழைத்துக் கொண்டிருக்க முடியும் என்று. ஆண்களுக்கு ஏன் இலவசமாக பேருந்து பயணம் வழங்கவில்லை. நமக்கு கொடுத்தால் எங்கே போய் சேரும் என்று எல்லாருக்கும் தெரியும். வீட்டு வாசல் வரைதான் நாங்கள் அமைச்சர் எல்லாம். வீட்டுக்குப் போய்விட்டால் எங்களுடைய பதவியெல்லாம் மனைவியிடம் சென்றுவிடும். பெண்களுக்கு மரியாதை அளிக்கும் நாடுதான் தமிழ்நாடு. முதலமைச்சரின் சுற்றுப் பயணத்தை பார்த்தால் எங்களுக்கே ஆச்சரியமாக உள்ளது. அவர் ஓடுவதால் தான் நாங்கள் ஓடிக் கொண்டிருக்கிறோம். எங்களை ஓடவைக்க கூடிய முதலமைச்சர் அதிகாரிகளையும் ஓடவைத்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு கூறினார்.