எதிர்பார்த்த அளவு கனமழை இல்லை; 3 பேர் உயிரிழப்பு - அமைச்சர் ராமச்சந்திரன்
டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதிப்பு, மற்றும் அரசின் நடவடிக்கை குறித்து கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “டிட்வா புயல் மழைக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி, தஞ்சையில் 2 பேர் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்துள்ளனர் , மயிலாடுதுறையில் 20 வயது இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் , 38 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு 2,330 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காவிரி படுகை மாவட்டங்களில் சுமார் 56 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழை நின்ற பிறகு பயிர் பாதிப்பு குறித்து முழுமையாக கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். டிட்வா புயலுக்கு 149 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. கனமழை மற்றும் சூறைக்காற்றுக்கு 234 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன.
சென்னை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவில் கனமழை பெய்யவில்லை. கடலூர், விழுப்புரம், சென்னையில் அதிக மழை இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் டிட்வா புயல் காரணமாக எதிர்பார்த்த அளவிற்கு மழை இதுவரை பெய்யவில்லை. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியதால் நிவாரணம் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்” என்றார்.


