கல்லூரி மாணவனை கடத்தி தந்தையிடம் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் திரைப்பட பாணியில் கல்லூரி மாணவனை கடத்தி ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் விஜயராகவன், இவர் பெட்ரோல் பங்க், ஏஜென்சி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருவதுடன் சமூக தொண்டாற்றியும் வருகிறார். இவரது மகன் பெரியண்ணா, தனியார் கல்லூரியில் பிஎஸ்சி அக்ரி படித்து வருகிறார். இவருடன் சேர்ந்து படிக்கும் சக மாணவர் வீட்டு திருமணத்திற்கு கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு திருமண வீட்டார் ரூ. 5 ஆயிரத்தை நெடுமாறன் என்பவரிடம் கொடுத்துவருமாறு, தொழிலதிபர் மகன் பெரியண்ணாவை அனுப்பினர்.
வலங்கைமான் பகுதியில் மிகப்பெரிய தொழிலதிபரான விஜயராகவனின் மகன் பெரியண்ணாவை கடத்தி சென்று கொலை செய்து விடுவோம் என மிரட்டி பணம் பறிக்கலாம் என திட்டமிட்டு, பணம் கொடுக்க வரும் பெரியண்ணாவை, விருப்பாச்சிபுரம் நெடுமாறன், விக்னேஸ்வரன், சந்திரசேகரபுரம் சந்தோஷ்குமார், வலங்கைமான் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் , உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் பெரியண்ணாவை கடத்தி விடுகிறார்கள். கடத்திய பெரியண்ணவை கருவேலங் காட்டுப்பகுதியில் மறைந்து வைத்துக் கொண்ட ஆள் கடத்தல் கும்பல், விஜயராகவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரூ. 10 லட்சம் பணம் கொடுங்கள் இல்லை என்றால் உங்கள் மகன் பெரியண்ணாவை கொலை செய்து விடுவோம் என மிரட்டி பணம் கேட்கிறார்கள். ஆனால் இதற்கு சிறிதும் அஞ்சாத விஜயராகவன், பணம் கொடுக்க முடியாது, தான் 160க்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவர்களை படிக்க வைத்து வருகிறேன். அதில் யாராவது என்னை நன்றாக பார்த்துக் கொள்வார்கள், நீங்கள் எனது மகனை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை என, ஆள்கடத்தல் கும்பலின் பேரத்திற்கு அடிபணியாமல் விஜயராகவன் பேசியுள்ளார்.
இதனால் தொடர்ந்து ஆத்திரமடைந்த ஆள் கடத்தல் கும்பல் கடத்திய பெரியண்ணாவின் கை, கால்களை கட்டி நாச்சியார்கோவில் என்ற இடத்தின் அருகே போட்டுவிட்டு தலைமறைவாகினர். தகவல் அறிந்து வந்த நாச்சியார்கோவில் காவல்துறையினர் பெரியண்ணாவை மீட்டு, விஜயராகவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வலங்கைமான் போலீசார் விருப்பாச்சிபுரம் விக்னேஸ்வரன், சந்திரசேகரபுரம் சந்தோஷ்குமார், வலங்கைமான் நிவாஸ் ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய விருப்பாச்சிபுரம் நெடுமாறன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.