கேலோ இந்தியா- 3ஆவது இடத்தில் தமிழ்நாடு

 
khelo india

முதல் முறையாக கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில் 90 பதக்கங்களை தமிழ்நாடு அணி வென்றுள்ளது. இதையடுத்து முதல் முறையாக முதல் 3 இடங்களுக்குள் இடம்பெறுகிறது தமிழ்நாடு.

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் சென்னை,திருச்சி,மதுரை,கோயம்பத்தூர் ஆகிய நகரங்களில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று பலுதூக்குதல் போட்டியில் தமிழக வீராங்கனை கீர்த்தனா 188 கிலோ தூக்கி தங்க பதக்கமும்,ஓவியா 185 கிலோ தூக்கி வெள்ளி பதக்கமும் வென்றார். அதேபோல தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் வளாகத்தில் நடைபெற்ற பேட்மின்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் விநாயக் ராம் ஸ்வஸ்திக் இணை தங்கம் வென்றனர்,ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் மித்தேஷ் வெண்கலம் வென்றார்.

அதேபோல் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டிகள் தமிழக வீரர்கள் தங்கம் வென்றனர். தமிழ்நாடு வீரர்களான பிரனவ், மஹாலிங்கம் இணை 6-3, 6-1 என்ற புள்ளிகள் கணக்கில் நேர் செட்டில் மஹாராஷ்டிரா இணையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.தமிழ்நாட்டின் ரேவதி, லக்‌ஷ்மி இணை 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் கர்நாடக இணையை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் மைதானத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் மகளிருக்கான 200 மீட்டர் மெட்லி போட்டியில் ஶ்ரீனிதி நடேசன் தங்கம் வென்றார் அதேபோல ஆண்களுக்கான 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் தமிழக வீரர் நித்திக் நதெல்லா தங்கம் வென்றார். அதேபோல 4*100 மீட்டர் மகளிருக்கான ரிலே போட்டியில் தமிழக வீராங்கனைகள் வெண்கலம் வென்றனர். இந்த கேலோ இந்த போட்டியில் மட்டுமே தமிழக வீராங்கனை ஶ்ரீநிதி நடேசன் 5 பதக்கங்களும், நித்திக் நதெல்லா 4 பதக்கமும் வென்றுள்ளனர்.