முதல் மாநிலமாக புதிய சட்டத்தின் கீழ் வக்ஃபு வாரியம் அமைக்கும் கேரளா!

 
kerala

புதிதாக நிறைவேற்றப்பட்ட வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கேரளா, தற்போது இந்த சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை என இரு அவையிலும் நள்ளிரவு வரை வாக்கெடுப்பு நடத்தி இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிரான பல்வேறு எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. தமிழகத்தில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த நிலையில், புதிதாக நிறைவேற்றப்பட்ட வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கேரளா, தற்போது இந்த சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது. கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம் புதிய சட்டம் அமலுக்கு வரும் முன்னரே முடிவடைந்ததால், புதிய வாரியத்தை புதிய சட்டத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டியது கட்டாயமாகியுள்ளது. வெளியேறும் வாரியத்தின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் 19ம் தேதி முடிவடைந்துவிட்டது. புதிய வாரியத்தைத் தேர்ந்தெடுக்கும் பணி பழைய சட்டத்தின் கீழ் அரசு ஏற்கனவே தொடங்கிய நிலையில், புதிய சட்டத்தின் கீழ் மீண்டும் தேர்வு நடைமுறைகளைத் தொடங்க உள்ளது.