தோள் சீலை போராட்ட நினைவு நாள் பொதுக்கூட்டம் - கேரளா, தமிழ்நாடு முதல்வர்கள் பங்கேற்பு..

தோள் சீலை போராட்டத்தின் 200வது ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
200 ஆண்டுகளுக்கு முன்னர் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் சில சமூகத்தை சேர்ந்த பெண்கள் தோள்சீலை அணியக்கூடாது என்ற நடைமுறை இருந்து வந்தது. இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் 1822-ம் ஆண்டு தோள்சீலை அணியும் போராட்டத்தை தொடங்கினர். பின்னர் இந்த போராட்டம் தீவிரமடைந்து, தோள் சீலை அணியக்கூடாது என்கிற நடைமுறையே நீக்கப்பட்டது.
இதனை நினைவுப்படுத்தும் விதமாக நாகர்கோவில் நாகராஜா திடலில் 200-வது ஆண்டு நிறைவு தோள்சீலை போராட்ட பொதுக்கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அவருடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். இருமாநில முதல்வர்கள் கலந்துகொள்ள உள்ளதால், நாகராஜா திடல் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.