அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பேன்- 10 மணி நேர விசாரணைக்கு பின் கதிர் ஆனந்த் பேட்டி

 
kathir anand

திமுக எம்பி கதிர் ஆனந்த்திடம் 10 மணி நேரம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவடைந்தது.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்  வேலூர் மக்களவைத் தொகுதியில்  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்காளர்களுக்கு  பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. இதன்பேரில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், கதிர் ஆனந்துக்கு நெருக்கமாக இருக்கும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு, காட்பாடியை சேர்ந்த திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு, கதிர் ஆனந்த் வீடு, அவரின் கல்லூரிகளில் அதிரடி சோதனை நடைபெற்றது. அப்போது, ரூ.11 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் குறித்து உரிய விளக்கம் கிடைக்கவில்லை என வருமான வரித்துறை சட்ட விரோத பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக வழக்கு பதிவு செய்தது.  

இந்த வழக்கில் கடந்த ஜனவரி 03, 2025 அன்று திமுக எம்.பி கதிர் ஆனந்த்தின் காட்பாடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. கதிர் ஆனந்துக்கு சொந்தமான  பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் கதிர் ஆனந்த் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து ரூ.75 இலட்சம் ரொக்கம், ரூ.13 கோடி மதிப்பிலான பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் எம்.பி கதிர் ஆனந்த் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சார்பில் சம்மனும் வழங்கப்பட்டு இருந்தது. சம்மனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கதிர் ஆனந்த் தரப்பு மனுதாக்கல் செய்திருந்த நிலையில், உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி இருந்தது.  இந்த நிலையில்  இன்று காலை 10.30 மணியளவில் கதிர் ஆனந்த் ஆயிரம் விளக்கு  அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜரானார். 

அவரிடம் தொடர்ந்து 10 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்று அமலாக்கத்துறை நிறைவு செய்த நிலையில், கதிர் ஆனந்த் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், “2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல், அது தொடர்பான கேள்விகளும் என்னுடைய விளக்கங்களை நான் தெளிவாக சொன்னேன். நாளை விசாரணை உள்ளதா என்பது தொடர்பாக அமலாக்கத்துறை அழைத்தால் வருவேன்” என தெரிவித்து சென்றார்.