"அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்"- கஸ்தூரி முழக்கம்
காவல் வாகனத்தில் ஏற்றும் போது நீதி வெல்லட்டும் என நடிகை கஸ்தூரி முழக்கமிட்டார்.

சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி தெலுங்கு மொழி பேசக் கூடியவர்கள் பற்றி அவதூறான கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் மீது பல்வேறு தரப்பினர் புகார் அளித்ததை தொடர்ந்து, 192- கலவரத்தை தூண்டுதல், 196(1) (a)-மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை உருவாக்குதல், 353(1) (b)- பொது அமைதியை கெடுக்கும் தவறான தகவல்களை பரப்புதல், 353(2)- மதம் இனம் மொழி அடிப்படையில் பகைமை உண்டாக்கும் பேச்சு, அவதூறு பரப்புரை ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். வழக்கு விசாரணைக்காக சம்மன் கொடுக்க ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர். ஆனால் வீட்டை பூட்டிவிட்டு செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு கஸ்தூரி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் ஐதராபாத்தில் சினிமா தயாரிப்பாளர் ஹரி என்பவரின் வீட்டில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி தனிப்படை போலீசாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் சென்னை அழைத்துவந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவை அடுத்து, அவர் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். முன்னதாக காவல்துறை வாகனத்தில் ஏறும் முன் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை நோக்கி, "அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்" என முழக்கமிட்டு சென்றார்.


