காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் யாரும் இல்லை!
Apr 23, 2025, 12:33 IST1745391802562
காஷ்மீர் தாக்குதலில் பலியானோரில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் யாரும் இல்லை என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மூன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 29 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து வெளியுறவு அமைச்சர், செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், காஷ்மீர் தாக்குதலில் பலியானோரில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் யாரும் இல்லை என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. காஷ்மீர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிடம் டெல்லியில் உள்ள தமிழக அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


