விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க கால தாமதம் ஏற்படும்- அருணா ஜெகதீசன்

 
அருணா ஜெகதீசன்

தமிழ்நாடு  அரசால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விபத்து குறித்து முழுமையான  விசாரணை மேற்கொண்டார். 

Image

கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட 41 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு சென்று சம்பவம் எப்படி நிகழ்ந்தது, எப்படி சென்றார்கள் யார் யாருடன் சென்றார்கள் போன்ற முழு விபரங்களையும் கேட்டறிந்த அருணா ஜெகதீசன் இதுபோன்ற கூட்டங்களில் எத்தகைய நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டும் போன்ற ஆலோசனைகளையும் அந்த குடும்பத்தினரிடம் கேட்டு பெற்றார். முன்னதாக சம்பவம் நிகழ்ந்த வேலுசாமிபுரத்தில் இரண்டாவது முறையாக நேரில் ஆய்வு செய்தார். மேலும் சம்பவம் குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். 

Image

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருணா ஜெகதீசன், “கரூர் கூட்ட நெரிசல் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளது, பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பதை அறிய சம்பவ இடத்தில் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க கால தாமதம் ஏற்படும்” என்றார்.