“விஜய்யை பின் தொடரும் 2,000 பேர் யார்? பெண்கள், குழந்தைகள் இறந்ததற்கு இதுவும் ஒரு காரணம்”

 
ச் ச்

கடந்த மாதம் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக் கூட்டியக்கம் சார்பில் கரூர் துயரம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தொழிலாளர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறையினரை சந்தித்து பேராசிரியர் சரஸ்வதி தலைமையிலான குழு உண்மைகளை திரட்டி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “விஜய் கூட்டம் நடக்கும் இடங்கள், அவர் விமான நிலையம் வரும் போது 2ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. விஜய் வாகனத்தை பின் தொடரும் 2 ஆயிரம் பேர் கொண்ட குழு யார்? இவர்கள் தவெகவினரால் ஏற்பாடு செய்யப்பட்டவர்களா? விஜய் வாகனம் கூட்டத்துக்குள் வந்த பின் 20 பேர் கொண்ட குழு கூட்டத்தை கயிறு கொண்டு உள்நோக்கி தள்ளியதாக கூறப்படுகிறது. கயிறு கட்டி கூட்டத்தை உள்நோக்கி தள்ளியது யார் என்ற உண்மையை கண்டறிய வேண்டும்.

செப்டம்பர் 25,26ல் கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக துண்டுகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. 27 ஆம் தேதி அன்றும் காலையில் இருந்து விஜய் எனும் நடிகரை பார்க்கும் ஆர்வத்தில் மக்கள் இருந்திருக்கிறார்கள்.  செப்டம்பர் 27 ஆம் தேதி மதிய நேரங்களில் மேளம், ஆட்டம், பாட்டம் என மக்கள் கூட்டம் மாலை வரை கூடியிருந்தது. கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு தாமதமாக விஜய் வந்துள்ளார். குழந்தைகள் பாதுகாப்பு கருதி பெண்கள் விஜய் வாகனத்தின் வலதுபுறம் இடம்பிடித்து நின்றுள்ளார்கள். விஜய் வாகனம் நின்ற இடத்திலிருந்த பெண்கள், குழந்தைகள் இருந்த இடத்துக்கு நகரவே கட்டுக்கடங்கா நெரிசல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும் பகுதியினர் விஜய் வாகனத்தின் வலதுபுறத்தில் இருந்தவர்கள். பெண்கள், குழந்தைகள் பெருமளவில் இறந்ததற்கு இதுவும் ஒரு காரணம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.