வருமான வரித்துறை சோதனை குறித்து முன்கூட்டியே தகவல் அளிக்கவில்லை - கரூர் எஸ்.பி.

 
Karur SP

வருமான வரித்துறை சோதனைக்கு முன்பு வருமானவரித் துறையினர் பாதுகாப்பு கேட்பது வழக்கம், ஆனால் எங்களுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கவில்லை என கரூர் எஸ்.பி. தெரிவித்துள்ளார். 

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  செந்தில் பாலாஜி வீடு,  அவரது சகோதரர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடியாக இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ,கரூர் , பெங்களூரு , ஹைதராபாத் உள்ளிட்ட  இடங்களில் சோதனை நடைபெற்ற வரும் நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். இந்நிலையில் கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் சோதனையிட வந்த வருமானவரித்துறை பெண் அதிகாரியை ஐடி கார்டை காட்டுங்கள் என்று கூறி பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் வருமானவரித்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். 

இந்த நிலையில், கரூரில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனை குறித்து முன்கூட்டியே முறையான தகவல் தெரிவிக்கவில்லை என்று கரூர் எஸ்.பி சுந்தரவதனன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவ்வது: சோதனைக்கு முன்பு வருமானவரித் துறையினர் பாதுகாப்பு கேட்பது வழக்கம். வருமான வரித்துறை அதிகாரிகள் சி.ஆர்.பி.எப் வீரர்களையும் அழைத்து வரவில்லை. எங்களுக்கும் தகவல் இல்லை. கார் கண்ணாடி உடைக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். வருமான வரி சோதனை நடக்கும் 9 இடங்களில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு கூறினார்.