“என்னை ஆபாசமாக பேசிய பாஜக நிர்வாகியை இதுவரை கைது செய்யாதது ஏன்? வழக்கு தொடர போகிறேன்”- ஜோதிமணி எம்பி
பொதுவெளியில் பெண் எம்பி என்று கூட பாராமல் ஆபாசமாகப் பேசிய பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் இதுவரை காவல்துறை செய்யாதது என்? நீதிமன்றத்தில் நானே வழக்காடுவேன் என எம்.பி ஜோதிமணி பேட்டியளித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 10-ம் தேதி கரூர் தலைமை தபால் நிலையம் முன்பாக பாஜக சார்பில் மகளிருக்கு எதிரான குற்றங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்களின் மாண்பைக் குலைக்கும் வகையிலும், ஒரு பெண்ணை அவமதிக்கும் விதமாகவும் அநாகரிகமான கருத்துகளைத் தெரிவித்ததாகப் புகார் எழுந்தது.
இதுகுறித்து கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, “ஒரு பெண் என்று கூட பாராமல் பொதுவெளியில் தரைக்குறைவாக பேசியுள்ளார். ஒரு கிராமத்திலிருந்து தனி ஒரு பெண்ணால் வளர்க்கப்பட்டு 30 ஆண்டுகாலம் அரசியலில் போராடி பஞ்சாயத்து கவுன்சிலராக இருந்து கட்சியில் பல்வேறு மாநிலங்களில் கட்சி பணியாற்றி ஏழு ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் என்னை ஒரு பெண்ணை ,ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை, பொதுவெளியில் ஆபாசமாகவும், அறுவெறுக்கத்தக்க வகையிலும் பேசிய பாஜக மாவட்ட தலைவர் செந்தில் நாதன் மீது புகார் கொடுக்கபட்டு,வழக்க்குப் பதிவு செய்து ஒன்பது நாட்கள் ஆகியும் இன்னும் கைதுசெய்யப்படவில்லை. கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கொடுத்த புகாரைப் பெற்றுக்கொண்டு,உடனடியாக உரிய பிரிவுகளில் கரூர் மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. அந்த தீவிரம் இப்பொழுது இல்லாதது மிகுந்த வருத்தமளிக்கிறது. என்னால் பொதுவெளியில் பகிரப்பட்ட அந்த வீடியோவைப் பார்த்து தமிழ்நாடே அதிர்ச்சியடைந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள்,நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்,ஊடகவியலாளர்கள்,சமூக செயல்பாட்டாளர்கள் என்று பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து காவல்துறை உடனடியாக குற்றவாளியை கைதுசெய்ய வேண்டும் எனவும்,காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் இயக்கங்கங்களால் டிஜிபி அலுவலகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனாலும், பொதுவாக சிறப்பாகச் செயல்படக்கூடியது என்று பெயர் பெற்ற தமிழ்நாடு காவல்துறை இவ்வழக்கில் காட்டுகிற சுணக்கம் ஏற்புடையதல்ல.
கரூரில் பொதுவெளியில் ஆபாசமாகவும்,அறுவெறுப்பாகவும் , கண்ணியத்தை சிதைக்கும் வகையிலும் பேசிய குற்றவாளி பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் இதுவரை காவல்துறையால் கைது செய்யப்படாதது குறித்து எனது ஊடகவியலாளர் சந்திப்பு
— Jothimani (@jothims) February 23, 2026
"ஒரு பெண்ணை ,ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற… pic.twitter.com/vyiwaveC6Z
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடைபெறும் ஆபாசத்தாக்குதலுக்கே குற்றவாளி கைது செய்யப்படவில்லையென்றால் ,எவ்வித அரசியல்,பொருளாதார பின்னணியும் இல்லாத எளிய பெண்களின் புகார்கள் என்னவாகும் என்கிற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. இன்று நான் கடந்து போனால் நாளை இது இன்னொரு சகோதரிக்கு நடக்கும். இதற்கு யாராவது ஒருவர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அது நானாக இருக்கட்டும். இந்த வழக்கில் குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்கும் வரை நான் போராடுவேன். அவசியம் ஏற்பட்டால் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் நானே வாதாடுவேன். அது மற்ற பெண்களுக்கும் ஒரு நம்பிக்கையை அளிக்கட்டும். கரூர் மாவட்ட காவல்துறை எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் பணியாமல் தனது கடமையை சரியாகச் செய்ய வேண்டும். விரைந்து செயல்பட்டு உடனடியாக குற்றவாளியை கைது செய்ய வேண்டும்” எனக் கூறினார்.

