கரூர் மாவட்ட பாமக செயலாளர் நீக்கம் - அன்புமணி அறிக்கை ..
கரூர் மாவட்ட பாமக செயலாளர் பி.எம்.கே பாஸ்கரன் நீக்கப்படுவதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும், கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இருவரையும் சமாதானப்படுத்த பலரும் முயற்சித்து வரும் நிலையில், கடந்தவாரம் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்ற அன்புமணி தந்தையுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்படி மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதுவும் பலனளித்ததாக இதுவரை தெரியவில்லை. நிறுவனர் ராமதாஸ் கட்சியின் நிர்வாகிகளை மொத்தமாக மாற்றியமைத்து வருகிறார். அன்புமணிக்கு ஆதரவாக இருப்பவர்களை தூக்கிவிட்டு அந்த இடத்தில் தனது ஆதரவாளர்களை நியமித்து வருகிறார். அரசியலுக்கு வயது இல்லை, நிறுவனறும் நானே, தலைவரும் நானே என ராமதாஸ் கூறிவரும் நிலையில் கரூர் மாவட்ட பாமக செயலாளாரை அன்புமணி அதிரடியாக நீக்கியுள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், “கரூரைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.எம்.கே பாஸ்கரன் என்பவர் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து இன்று முதல் நீக்கப்படுகிறார். பாட்டாளி மக்கள் கட்சியினர் எவரும் அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம்” என்று உத்தரவு பிறப்பித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஸ்கர், தம்மை பதவியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை எனவும், ஒரு மாவட்ட செயலாளரை நீக்கும் அதிகாரம் செயல் தலைவருக்கு உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். இதன்மூலம் அன்புமணி - ராமதாஸ் இடையேயான உட்கட்சி பூசல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


