கருணாஸ்க்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைப்பு..!

 
1

புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில் குற்றவாளி கருணாஸ்க்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. போக்சோ குற்றச்சாட்டுகள் காவல்துறை தரப்பில் நிரூபிக்கப்படாததால் விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம், முத்​தி​யால்​பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ், விவேகானந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

2024 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட விவேகானந்தன், சிறை கழி​வறை​யில் விபரீத முடிவு எடுத்து கொண்​டார். தொடர்ந்து, கருணாஸுக்கு எதிரான வழக்கை விசாரித்த புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம், அவருக்கு தூக்குத் தண்டனை விதித்து, கடந்த மே 8 ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்காக, வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (செப். 30) விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, குற்றவாளி கருணாஸுக்கு எதிரான போக்சோ குற்றச்சாட்டுகள் காவல்துறை தரப்பில் நிரூபிக்கப்படவில்லை. எனவே அந்த குற்றச்சாட்டில் விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அதே நேரம் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இந்த நீதிமன்றம் தீர்ப்பளிப்பதாக உத்தரவிட்டனர்.