கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை- மு.க.ஸ்டாலின்

 
mkstalin

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

mkstalin


இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 14.42 கோடி நூலுரிமைத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வரிசையில், சமூக நீதிக்காக அரும்பாடுபட்ட தலைவரும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவரும், தமிழுக்கு செம்மொழி தகுதியினைப் பெற்றுத் தந்தவரும், தனது எழுத்து மற்றும் பேச்சுக்களின் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தவருமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அனைத்து நூல்களும் தமிழ்நாடு அரசு சார்பில் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (22.8.2024) ஆணை வழங்கியுள்ளார்.

தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சூன் 3, 1924 அன்று நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை கிராமத்தில் பிறந்து, தமது கடின உழைப்பாலும் அளப்பரிய திறமையாலும் தமிழ் வளத்தாலும், தமிழ்நாட்டில் ஒரு மாபெரும் ஆளுமையாக விளங்கியவர். முத்தமிழறிஞர் கலைஞர் என்பது பெயர் மட்டுமல்ல.தமிழினத்தின் தன்னேரில்லாத தனி முகவரி ! பல தலைமுறைகளின் எழுச்சிக்கான திறவுகோல் ! 5 முறை முதலமைச்சர், 13 முறை சட்டமன்ற உறுப்பினர் என ஒரு தலைமுறை மாற்றத்திற்கு வித்திட்ட மகத்தான தலைவர்.

mkstalin

தமிழுணர்வு கொண்ட 14 வயது சிறுவனாகத் தம் இலக்கிய வாழ்வைத் தொடங்கி, 15ஆம் வயதில் "மாணவ நேசன்" என்ற கையெழுத்து ஏடு தொடங்கி, 18ஆம் வயதில் பேரறிஞர் அண்ணா அவர்களின், "திராவிட நாடு" இதழில் இளமைப்பலி என்ற அவரது முதற்கட்டுரை வெளியாகி பெரும் வரவேற்பைப் ற்றது. தம்முடைய 20-ஆவது வயதில், திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்னும் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். மது 23-ஆம் வயதில் இராஜகுமாரி திரைப்படத்திற்கு முதன் முதலாக வசனம் எழுதினார். முதன் முதலில் "முரசொலி" என்னும் துண்டு இதழ் வெளியீட்டை 1942-ஆம் ஆண்டு வெளியிட்டு பின்னர் 1946 முதல் 1948 வரை திங்களிதழாக மாற்றி பின் மீண்டும் 1953-இல் சென்னையில் திங்களிதழாகத் தொடங்கி 1960- ஆம் ஆண்டில் அதனை முழுமையான நாளிதழாக மாற்றினார். அந்த முரசொலி நாளிதழ் இன்றும் முழங்குகிறது.

அனார்கலி, உதய சூரியன், உன்னைத்தான் தம்பி, இளைஞன் குரல், ஒரே முத்தம், காகிதப்பூ. சாக்ரடிஸ், சாம்ராட் அசோகன், சிலப்பதிகாரம் - நாடகக் காப்பியம், சேரன் செங்குட்டுவன், திருவாளர் தேசியம் பிள்ளை, தூக்குமேடை, நச்சுக் கோப்பை, நான்மணிமாலை, நானே அறிவாளி, புனித இராஜ்ஜியம், மணிமகுடம், மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்), மந்திரிகுமாரி உள்ளிட்ட பல்வேறு நாடகங்களை எழுதியுள்ளார். வெள்ளிக்கிழமை, சுருளிமலை, வான்கோழி, புதையல், ஒரே ரத்தம், ஒரு மரம் பூத்தது, அரும்பு, பெரிய இடத்துப் பெண், சாரப்பள்ளம் சாமுண்டி, நடுத்தெரு நாராயணி ஆகிய புதினங்களையும் மாபுரிப் பாண்டியன், பொன்னர் - சங்கர் அண்ணன்மார் வரலாறு, பாயும் புலி பண்டாரக வன்னியன், தென்பாண்டிச் சிங்கம், தாய் - காவியம் ஆகிய வரலாற்றுப் புதினங்களையும் சங்கிலிச் சாமியார், கிழவன் கனவு, பிள்ளையோ பிள்ளை, தப்பிவிட்டார்கள், தாய்மை, நாடும் நாடகமும், முடியாத தொடர்கதை, பதினாறு கதையினிலே, நளாயினி, பழக்கூடை, தேனலைகள், ஒருமரம் பூத்தது, மு.க.வின் சிறுகதைகள் உள்ளிட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

கவிதையல்ல, முத்தாரம் (சிறையில் எழுதிய கவி வசனங்கள் தொகுப்பு), அண்ணா கவியரங்கம், Pearls (Translation), கவியரங்கில் கலைஞர், கலைஞரின் கவிதைகள், வாழ்வெனும் பாதையில், கலைஞரின் திரை இசைப்பாடல்கள், கலைஞரின் கவிதை மழை, காலப் பேழையும் கவிதைச் சாவியும் உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளும் அவரது கவித்திறமையை வெளிப்படுத்துவன.கலைஞரின் குறளோவியம் மிகவும் புகழ்பெற்ற நூல்; தேனலைகள், சங்கத் தமிழ், திருக்குறள் கலைஞர் உரை, தொல்காப்பியப் பூங்கா உள்ளிட்ட தமிழறிஞர்கள் போற்றும் உரை நூல்களையும் படைத்துள்ளார்.

mkstalin

உடன்பிறப்புகளுக்குக் கலைஞர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு. 54 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. 'நெஞ்சுக்கு நீதி' என்னும் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் 6 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 1957 முதல் 2018-ஆம் ஆண்டுவரை கலைஞர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. தனியொரு மனிதரால் அவரது வாழ்நாள் காலத்தில் இத்தனை இலக்கிய படைப்புகளை வழங்க இயலுமா என வியப்புறும் வண்ணம் இலக்கிய உலகில் சாதனைகள் படைத்தவர் கலைஞர் அவர்கள்.
எண்பதாண்டுகாலம் பொது வாழ்வு, ஐந்துமுறை முதலமைச்சராக மக்கள் பணி மட்டுமல்லாமல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை வசனங்களையும், 15 புதினங்களையும், 20 நாடகங்களையும், 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் படைத்துள்ளார்கள். இவற்றைத் தவிர, தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களையும் தீட்டியுள்ளார்.

மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலங்களில் 108 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை செய்து, அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகையாக 7 கோடியே 76 இலட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார் என்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கவையாகும்.
இத்தகைய ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அனைத்து நூல்களும் நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் செழுமையான நூல்களை ஊன்றிப் படிக்க அரியதொரு வாய்ப்பாக அமையும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.