அமர் பிரசாத் ரெட்டியை அரசு பேருந்தில் அழைத்து சென்றுள்ளனர்- கரு.நாகராஜன் ஆவேசம்
அமர் பிரசாத் ரெட்டியை அரசு பேருந்தில் அழைத்துச் சென்றது மிகவும் கண்டனத்திற்குரியது என பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் இல்லத்தில் வைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்ற முயன்ற போது ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்ததாக பாஜக மாநில விளையாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அமர் பிரசாத் ரெட்டி ஜாமீன் கோரி செங்கல்பட்டு மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் தீர்ப்பை நாளை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் நீதிமன்றத்திற்கு வந்த பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காவல் துறையினர் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை பார்வையிடுவதை விட்டு விட்டு, பாரதிய ஜனதா கட்சியினர் எங்கெல்லாம் கட்சி கொடியை ஏற்றுகிறார்கள் என பார்வையிட்டு வருகின்றனர். தமிழகத்தில் காவல்துறையினரின் பணி மிக மோசமாக உள்ளது. 10000 இல்ல 20000 கொடியை கூட ஏற்றுவோம்.. பாஜக என்றால் அவங்களுக்கு காழ்ப்புணர்ச்சி.. பொறாமையில் தான் இப்படி செய்கிறார்கள். மற்ற கட்சிகளின் கொடிகள் இருக்கும் இடங்களில் எங்கள் கொடியையும் வைக்க அனுமதிக்க வேண்டும்; இல்லையென்றால் சட்டப்போராட்டத்தை தொடருவோம்.
அமர் பிரசாத் ரெட்டியை அரசு பேருந்தில் அழைத்து சென்றுள்ளனர். தமிழக காவல்துறைக்கு பேருந்துகள் இல்லாமல் இருந்தால் அரசு பேருந்தில் அழைத்து செல்லலாம், இல்லையென்றால் தனியாக அரசு பேருந்து வைத்து அழைத்து சென்று இருக்கலாம் ஆனால், பல்வேறு இடங்களில் பல்வேறு பிரச்சினைகள் நடந்து வருகிறது. இங்கு பெட்ரோல் குண்டுகள் வீசுவது கூட விளையாட்டு தனமாக போய் உள்ளது. அப்படி இருக்கையில் பாஜகவின் முக்கிய பொறுப்பாளரை அரசு பேருந்தில் அழைத்து செல்வது மிகவும் கண்டனத்திற்கு உரியது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் 1,800 இடங்களில் சோதனை நடைபெற்றது. ஆகவே வருமான வரித்துறை சோதனையை அரசியலாக்க வேண்டாம்.” என்றார்.