“விஜய் ஆதரவை கேட்காத கட்சி அவருக்கு ஆதரவு அளித்தால் அவர் என்ன செய்ய முடியும்?”- கார்த்திக் சிதம்பரம்

 
கட்சி அறிவிப்பது பெரிய விஷயம் இல்லை... விஜய்க்கு பட்டால் தான் புரியும்- கார்த்தி சிதம்பரம்

வேட்பாளர்கள் யார் என்றே தெரியாமல் த.வெ.கவிற்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள், இது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல என காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்.


திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்பி கார்த்திக் சிதம்பரம், “ த.வெ.க அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் பங்கேற்கும், எத்தனை அமைச்சர்கள் என்னென்ன இலாக்கா என்பதை முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார். த.வெ.க அரசு பதிவேற்று இன்னும் ஒரு வாரம் கூட முடிவடையவில்லை, அதற்குள் அவர்களுடைய செயல்பாடுகளை விமர்சிப்பது நியாயம் அல்ல. அவர்கள் நிர்வாகத்தை சீரமைத்து அமைச்சரவை விரிவாக்கம் செய்து பட்ஜெட் போட்ட பின்னரே அவர்களின் திட்டங்கள் குறித்து அறிவிப்பார்கள். அதன்பின்பே அவர்களின் செயல்பாடுகளை மதிப்பிட முடியும். எந்த அரசாங்கமாக இருந்தாலும் அது தொடர்ச்சி தான் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் வேண்டுமானாலும் மாறலாம் அரசாங்கம் மாறாது. முந்திய அரசு திட்டங்களின் தொடர்ச்சியை தான் அடுத்த அரசும் மேற்கொள்ளும்.

தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்து உள்ளார்கள் அந்த மாற்றத்திற்கு தலைமை தாங்க வேண்டியது விஜய் தான் என வாக்களித்துள்ளார்கள். ஐந்தாண்டுகள் அரசை நடத்துவதற்கு விஜய்க்கு பெரும்பான்மை இருக்கும் என தான் நம்புகிறேன். ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் கூட எடப்பாடி பழனிச்சாமி மேல் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அதிமுகவின் சிறப்பு தன்மை பாதிக்கப்படும் என தான் நான் நினைக்கிறேன். விஜயை அனைவரும் குறைத்து மதிப்பிட்டு விட்டோம். குறிப்பிட்ட வாக்கு தான் வாங்குவார்கள் என நினைத்தோம், ஆனால் இன்று வெற்றி பெற்றுள்ளார்கள். தமிழ்நாட்டில் திமுக அதிமுகவிற்கான எதிர் மனநிலை மக்கள் குறிப்பிட்ட சதவீதம் இருந்தார்கள். அதை இதற்கு முன்பு யாரும் சரியாக அறுவடை செய்யவில்லை, தற்பொழுது ஒரு பிரபலமான சினிமா முகமான விஜய் அதை அறுவடை செய்துள்ளார். குறிப்பாக சமூக வலைத்தளங்கள் மூலமாக அரசியலைப் பார்த்தவர்கள் விஜய்க்கு ஆதரவளித்து உள்ளார்கள். த.வெ.க ஆட்சி அமைக்க ஒரு பேரமும் நடைபெறவில்லை. விஜய் ஆதரவை கேட்காத கட்சி அவருக்கு ஆதரவு அளித்தால் அவரால் என்ன செய்ய முடியும். யாரிடம் கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என முடிவெடுக்க வேண்டியது நம்முடைய நாடு தான். ஆனால் ஒன்றிய அரசு அமெரிக்காவிடம் முழுமையாக அடிபணிந்து விட்டது. நடந்து முடிந்த தேர்தலில் வேட்பாளர் யார் என்றே தெரியாமல் த.வெ.கவிற்கு மக்கள் வாக்களித்து உள்ளார்கள், இது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் நடக்கும்” என்றார்.