“திமுக- காங்கிரஸ் இடையே இப்போது உள்ள உரசலுக்கு திமுகவே காரணம்”- கார்த்தி சிதம்பரம்
திமுக காங்கிரஸ் இடையே இப்போது உள்ள உரசலூக்கு திமுகவே காரணம், விரைவாக குழு அமைத்திருந்தால் இது போன்ற பிரச்சனை வந்திருக்காது, இனியும் குழு அமைக்காமல் திமுக தாமதப்படுத்தினால் இன்னும் மனக்கசப்பு அதிகமாகும் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், “நாடாளுமன்றத்தில் ஒன்றுமே நடக்கவில்லை அது தான் உண்மை, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி முன்னாள் ராணுவ தளபதி எழுதிய புத்தகத்தை மேற்கோள்காட்டி பேச முயன்ற போது, ஆளும்கட்சி உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாராளுமன்றம் முடங்கி கிடக்கிறது. எதிர்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதிக்க வேண்டும், ஆனால் எதிர்கட்சி தலைவரை கூட பேச அனுமதிக்கவில்லை. பிரதமருக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அது குறித்து விசாரிக்க ஏன் இதுவரையில் குழு அமைக்கவில்லை, அது போன்ற பிரச்சனை ஏதும் நாடாளுமன்றத்தில் நடைபெறவில்லை.
திமுக காங்கிரஸ் ஆகிய இரண்டு பேரும் ஒன்றாக இருந்தால் தான் இரண்டு பேரும் வெற்றி பெற முடியும் என்பது என் கருத்து. இரண்டு மாதங்களாக காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் பேசி வருவதும் குழப்பமான நிலை நீடிப்பதற்கும் திமுக குழு அமைக்காதது தான் காரணம். திமுக காங்கிரஸ் இடையே இப்போது உள்ள மணக்கசப்பிற்கு திமுக வே காரணம் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு குழு அமைத்திருந்தால் இதுபோன்ற சர்ச்சை கருத்துக்கள் வந்திருக்காது இனியும் தாமதிக்காமல் பேச்சுவார்த்தை குழுவை திமுக அமைக்க வேண்டும் இல்லை என்றால் மனக்கசப்புகள் மேலும் அதிகமாகத் தான் செய்யும். ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்து பத்து தினங்களுக்கு மேலாகியும் அதன் பிறகும் கூட்டணிக்கு திமுக பேச்சுவார்த்தை குழு அமைக்காதது எதற்காக என்பது தெரியவில்லை, ஏதாவது ஒரு முடிவை திமுக எடுக்க வேண்டும். திமுகவும் குழு அமைத்து பேசிவிட்டால் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும். 1967 க்கு பின்னர் நாங்கள் ஆட்சியில் இல்லை தான், தனித்து நிற்க கூடிய பலம் இல்லை தான், அதேவேளையில் நாங்கள் இருக்கும் கூட்டணி தான் பலமான கூட்டணியாக ஆட்சி அமைக்கும். அதிமுக அரசு ஒருவேளை அமைந்தால் அது அதிமுக அரசாக இருக்காது, பாஜக ஆட்சியாகத்தான் இருக்கும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு என்று ரசிகர்கள் உள்ளனர். அந்த ரசிகர்கள் தொண்டர்களாக மாறலாம், தொண்டர்கள் வாக்களிக்கலாம் அந்த வாக்குகளால் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று அது சீட்டாக மாறுமா என்பது கேள்விக்குறி தான். தமிழக வெற்றிக் கழகம் தற்போது களத்தில் சுறுசுறுப்பாக உள்ளது என்பது உண்மை” என்றார்.


