காங்கிரஸ் கட்சிக்கு அம்பானி, அதானி பணம் கொடுத்தார்களா?- கார்த்தி சிதம்பரம் அதிரடி

 
karti chidambaram

காங்கிரசுடன் திமுக கூட்டணியை முறித்துக் கொள்ளுமா என்ற மோடியின் பேச்சு ஆசை, பேராசை என்று  சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

Image

சென்னை சூளைமேடு கில் நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பங்கேற்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பதவியை சாம் பிட்ரோடா ராஜினாமா செய்துள்ளார்.அவருடைய கருத்துக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.அவரும் அவருடைய பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
காங்கிரஸ் கட்சி குடியரசு தலைவர் தேர்தலின் போது குடியரசுத் தலைவரின் நிறம் மற்றும் தோல் ஆகியவற்றின் காரணமாகத்தான் வாக்களிக்கவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பாஜக மோடி மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? 

திமுகவுடன் காங்கிரஸ்  கூட்டணியை முறித்துக் கொள்ளுமா? என்ற மோடியின் பேச்சு என்பது ஆசை, பேராசை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் மற்றும் திமுக ஒற்றுமையாக உள்ளது. 39 தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெறும். நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண விவகாரத்தில் அது கொலையா தற்கொலையா என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை தொடங்கி ஓரிரு நாட்களே ஆவதால்  அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது.


நிச்சயமாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். ஜெயக்குமார் மரண விவகாரத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக கருத முடியாது. இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி காலத்தில் இரண்டு மாதம் தேர்தல் நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்தின் நடுநிலையை யோசிக்க வைக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு பணம் கொடுத்து இருந்தால் அதானி மற்றும் அம்பானி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிடட்டும்” எனக் கூறினார்.