"கூட்டணி முறிவை கண்ணியமாக கையாண்டிருக்கலாம்"- கார்த்தி சிதம்பரம்
திமுகவுக்கு உரிய மரியாதையையும் நன்றியையும் செலுத்திவிட்டு அணியில் இருந்து நாங்கள் வெளியேறி இருக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், "திமுக கூட்டணியில் இருந்து மாறும் பொழுது சில நடைமுறைகளைப் பின்பற்றியிருக்க வேண்டும். அந்தத் தேர்தலிலே அவர்கள் எங்களுக்குச் செய்த பணிக்கு நன்றி, மரியாதையைச் செலுத்திவிட்டு நாங்கள் வெளியேறியிருக்க வேண்டும். அந்தச் சூழலை இன்னும் கொஞ்சம் கௌரவமாக, நாகரிகமாகக் கையாண்டிருக்க வேண்டும். அதனால் அவர்களுக்கு எங்கள் மீது ஒரு மனஸ்தாபம் இருக்கிறது. ஆனால், அந்த மனஸ்தாபத்திற்காகவே அவர்கள் இன்றைக்கு வந்து ஒரு அரசியல் முடிவை எடுக்கிறார்கள். அது இந்தியாவுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும், தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதே நேரம் மனஸ்தாபம் இல்லாமல் நாங்கள் நடந்துகொண்டிருக்க வேண்டும்.
தேர்தலுக்குப் பிறகு கூட்டணியை காங்கிரஸ் மாற்றிய விதம் தி.மு.க.வுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை நான் முழுமையாக ஏற்றுகொள்கிறேன். அதே நேரத்தில் கூட்டணியிலேயே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இருந்திருந்தாலும் திமுகவால் ஆட்சி அமைத்திருக்க முடியாது. எங்கள் மீதுள்ள வருத்தத்தைவிட இந்தியாவிற்கு, தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு என்பதை திமுக எண்ணிப்பார்க்க வேண்டும்" என்றார்.

