கர்நாடகாவில் குட்கா, பான் மசாலாவிற்கு ஓராண்டு தடை..!

 
1

கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. பெங்களூரில் கடந்த நான்கைந்து நாட்களாக உணவு பாதுகாப்பு துறையினர், சிறிய ஹோட்டல்கள் துவங்கி நட்சத்திர ஹோட்டல்கள் வரை அதிரடி, ‘ரெய்டு’ நடத்தினர். இதில், அழுகிய இறைச்சி, காய்கறிகள் மற்றும் கெட்டுப்போன பால் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். 

இந்நிலையில், உணவு பாதுகாப்பு துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடக அரசின் சுகாதாரம், குடும்ப நலத்துறை கீழ் இயங்கும் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் உணவு பாதுகாப்பு பிரிவு, பொது சுகாதார நலன் கருதி, புகையிலை, ‘நிக்கோடின்’ அடங்கிய பொருட்களுக்கு எதிராக மாநிலம் முழுதும் கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. 

புகையிலை அல்லது நிக்கோடின் அடங்கிய குட்கா, பான் மசாலா மற்றும் பிற தடை செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யவோ, சேமிக்கவோ, கொண்டு செல்லவோ, வினியோகம் செய்யவோ, விற்பனையோ செய்யாத வகையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தலைமையில் சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி, கர்நாடக மாநிலத்தில் புகையிலை மற்றும் நிக்கோடின் அடங்கிய பொருட்களின் விற்பனை மற்றும் விநியோகத்துக்கு ஓராண்டுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதற்கான அரசாணை ஆக., 10ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. 

அரசாணை வெளியான நாள் முதல், ஓராண்டு காலத்துக்கு இந்த தடை அமலில் இருக்கும். தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோடின் பொருட்களின் உற்பத்தி, விற்பனை அல்லது வினியோகம் நடந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.