கரகாட்டத்தை எவ்விதத்திலும் சிதைக்கக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு..!

 
1

தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் கோயில் திருவிழாவையொட்டி கரகாட்டம் நிகழ்ச்சி நடத்த அனுமதி, பாதுகாப்பு அளிக்க போலீசாருக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கலானது. நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார். 


அரசு தரப்பு,‛கரகாட்டம்' என்ற பெயரில் உண்மையில் கரகாட்டத்தை நடத்துவதில்லை. மாறாக அது ஆபாச ஆடல், பாடல் நிகழ்ச்சி போல் நடத்தப்படுகிறது,' என தெரிவித்தது.


நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கரகாட்டம் என்பது தமிழ் பண்பாட்டில் போற்றப்படும் நடன வடிவங்களில் ஒன்று. 'கரகாட்டம்' என்றழைக்கப்படும் இந்நடனம், தமிழகத்தில் புகழ்பெற்ற ஒரு பாரம்பரிய நாட்டுப்புறக் கலை. இது மழைக் கடவுளான மாரியம்மனுக்கு சமர்ப்பிக்கப்படும் ஒரு காணிக்கையாக நிகழ்த்தப்படுகிறது. சிக்கலான, நுணுக்கமான அசைவுகளை வெளிப்படுத்தும் அதே வேளையில், நடனக் கலைஞர்கள் தங்கள் தலையின் மீது பானைகள் அல்லது குடங்களை சமநிலையில் நிறுத்தி ஆடுவதே இந்நடனத்தின் தனித்துவ சிறப்பு.இதற்கு திறமை, கவன குவிப்பு தேவை. இதில் வண்ணமயமான ஆடைகள், தாள லயத்திலான மற்றும் நேர்த்தியான உடல் அசைவுகள் இடம்பெறும். இக்கலை வடிவம் தமிழக கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. 

பாரம்பரியமாக, கரகாட்டம் ஆடுபவர்கள் தங்கள் தலையில் நீர் நிரம்பிய பானைகளை சமநிலையுடன் தாங்கி ஆடும் வித்தைகளுக்காக அறியப்படுகிறார்கள். இது கடவுள் மீதான பக்தியை குறிக்கிறது. 'கரகாட்டம்' எனும் பாரம்பரிய நடனமானது, அதன் ஆடும் முறையிலோ அல்லது உடை அணியும் முறையிலோ எவ்விதத்திலும் சிதைக்கப்படக்கூடாது. 

கரகாட்டம் நிகழ்த்தும்போது ​​'கரகாட்டக்காரன்'படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதுபோல் முறையான ஆடைகளை அணிவதையே அக்கலைஞர்கள் பின்பற்ற வேண்டும். ஒருநாள் மட்டும் கரகாரட்டம் நடத்த மனுதாரருக்கு போலீசார் அனுமதியளிக்க வேண்டும். 

இவ்வாறு உத்தரவிட்டார்.