கோவை காமாட்சிபுரி ஆதீனம் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

 
stalin

கோவை காமாட்சிபுரி ஆதீனத் தலைவர் தவத்திரு சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி:-

tn

கோவை காமாட்சிபுரி ஆதீனத் தலைவர் தவத்திரு சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.மேற்கு மண்டலத்தில் ஆன்மீக வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டுக்காகப் பாடுபட்ட அப்பழுக்கற்ற துறவியான சிவலிங்கேஸ்வர சுவாமிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்திய பெருமைக்குரியவர். தமிழைப் பரப்புவதைத் தமது வாழ்நாள் பணியாக மேற்கொண்டு வந்த அவர், பசும்பொன் தேவர் திருமகனார் நினைவிடத்தில் குருபூஜை செய்யும் உரிமையைப் பெற்றவர் ஆவார். பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து தமிழ்மொழியைப் பரப்பி வந்த அவர், பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களைத் தங்க வைத்து, அவர்கள் கல்வி கற்க உதவிகளையும் புரிந்து வந்தார்.

tn

தொண்டிலும், துறவிலும் சிறந்து விளங்கிய சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் மறைவு தமிழ்ச் சமயநெறிக்கும், தமிழ்மொழி வழிபாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது சீடர்களுக்கும், மாணவர்களுக்கும், சமயப் பற்றாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.