சனாதன கருத்து சர்ச்சை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் ஆதரவு

 
kamal hassan

சனாதன கருத்து தொடர்பான சர்ச்சையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய போது சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள்.  அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். சிலவற்றை  ஒழிக்க வேண்டும்,   எதிர்க்க முடியாது. டெங்கு, மலேரியாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என கூறினார்.   இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,  அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி என அயோத்தியை சேர்ந்த சாமியார் அறிவித்துள்ளார்.  ஆனால் இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் உதயநிதி,  எனது தலையை சீவ பத்து கோடி? எதற்கு பத்து ரூபாய் சீப்பு போதுமே என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார். சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

udhayanidhi stalin tn assembly speech

இந்த நிலையில், சனாதன கருத்து தொடர்பான சர்ச்சையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், உண்மையான ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு அதன் குடிமக்கள் கருத்து வேறுபாடு மற்றும் விவாதத்தில் ஈடுபடும் திறன் ஆகும். சரியான கேள்விகளைக் கேட்பது முக்கியமான பதில்களுக்கு வழிவகுத்தது மற்றும் சிறந்த சமூகமாக நமது வளர்ச்சிக்கு பங்களித்தது என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குக் கற்பித்துள்ளது.
 



 சனாதனத்தைப் பற்றி கருத்து கூற உதயநிதி ஸ்டாலினுக்கு  உரிமை உண்டு. அவருடைய கருத்துடன் நீங்கள் உடன்படவில்லை என்றால், அவருடன் நீங்கள் விவாதத்தில் ஈடுபடலாம். ஆனால் அவரது வார்த்தைகளை திரித்து கூறி குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக வன்முறை அச்சுறுத்தல்கள் அளிப்பது சரியானது அல்ல. ஆரோக்கியமான விவாதங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் பாதுகாப்பான இடமாக இருந்து வருகிறது, அது தொடர்ந்தும் இருக்கும். உள்ளடக்கம், சமத்துவம் மற்றும் முன்னேற்றத்தை உறுதிசெய்து, நமது மரபுகளை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்வது மிகவும் முக்கியமானது. இணக்கமான மற்றும் உள்ளடக்கிய சமூகத்தை வளர்ப்பதற்கு ஆக்கபூர்வமான விவாதங்களை ஏற்றுக்கொள்வோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.