மநீம சுட்டிக்காட்டிய பல விஷயங்களை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது - முதல்வருக்கு பாராட்டு!!

 
tn

இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்ற திமுக அரசை வாழ்த்துகிறோம் என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. 

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதையடுத்து இன்று காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் உள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இதன் பிறகு மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு மு க ஸ்டாலின் விரைந்தார். அங்கு மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

kamal

அத்துடன் சென்னை ஆர்.கே. சாலையில் அரசு பேருந்தில் ஏறி மக்களோடு மக்களாக பயணம் செய்தார் முதல்வர் முக ஸ்டாலின். மேலும் இலவச பேருந்து திட்டம் குறித்த பெண் பயணிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். இதை தொடர்ந்து சட்டப்பேரவையில் அரசு பள்ளிகளில் 1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி வழங்கப்படும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும், தமிழகம் முழுவதும் சுமார் ரூ.150 கோடி செலவில் தகைசால் பள்ளிகள் அமைக்கப்படும், தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சி, 63 நகராட்சிகளில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும், 234 தொகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 'உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்' செயல்படுத்தப்படும் உள்ளிட்ட 5 புதிய அறிவிப்புகளை அறிவித்தார். 



இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், " ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஓராண்டை நிறைவு செய்யும் திமுக அரசுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஓர் ஆக்கப்பூர்வமான எதிர்க் கட்சியாக மக்கள் பிரச்னைகளை மக்கள் நீதி மய்யம் அரசின் கவனத்திற்கு உடனுக்குடன் கொண்டு சென்றுள்ளது. சிறப்பான செயல்பாடுகளைப் பாராட்டியுள்ளது. செய்யத் தவறியவற்றை சுட்டிக்காட்டி, விமர்சிக்கவும் தயங்கியதில்லை. திமுக அரசும் மநீம அறிக்கைகளில் சுட்டிக்காட்டிய பல விஷயங்களை நிறைவேற்றியுள்ளது. மக்கள் நலனை முன்னிறுத்தும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக எங்கள் பணி தொடரும். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் விரைந்து செயல்படுத்தி இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்ற திமுக அரசை வாழ்த்துகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.