“எதற்கு ஈகோ? கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்”- தமிழிசை சௌந்தரராஜன்
சவார்க்கரை முன்னுதாரணமாக கொண்டு கர்நாடகாவிடம் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. நாளை மறுநாள் ( ஜூன் 5) இந்தப்படம் வெளியாக உள்ளது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற தக் லைஃப் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ‘தமிழில் இருந்து பிரிந்தது தான் உங்கள் கன்னட மொழி’ என கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து கூறினார். இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. கன்னட மொழியை கமல்ஹாசன் அவமதித்துவிட்டதாகக் கூறி கர்நாடக அரசியல்வாதிகள் , பல்வேறு அமைப்புகள், கன்ண்ட திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மன்னிப்பு கேட்க கமல்ஹாசன் மறுத்து தக் லைஃப் படத்தை அங்கு ரிலீஸ் செய்யவில்லை.
Don't create animosity between states for selfish reasons while our selfless army is fighting for Nation His words are unwarranted He must apologise instead of lengthy letters Rajyasabha promotion from DMK recently made him 2 speak for linguistic chauvinism meant to please DMK https://t.co/fNi0cr0q7C
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) June 3, 2025
இந்நிலையில் இவ்விவகாரத்தில் கருத்து கூறியுள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை, “கன்னட மொழி விவகாரத்தில் கமல் பேசியது தேவையற்றது. நமது தன்னலமற்ற ராணுவம் தேசத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் போது, சுயநல காரணங்களுக்காக மாநிலங்களுக்கு இடையே பகைமையை உருவாக்காதீர்கள். அன்பு மன்னிப்பு கேட்காது என கூறிவிட்டு, நீண்ட விளக்கத்தை தருகிறார் கமல்ஹாசன். நீண்ட கடிதம் எழுதுவதற்கு பதிலாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏனெனில் அவர் தவறு செய்துள்ளார். மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு? இதில் அவருக்கு எதற்கு ஈகோ?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


