“கோமியத்தில் நோய் எதிர்ப்புச்சக்தி உள்ளது; அதற்கான ஆதாரமும் உள்ளது”- காமகோடி

கோமியத்தில் மருத்துவ குணங்கள் உள்ளது, அதற்கு ஆதராமும் உள்ளது... வேண்டுமானால் படித்து தெரிந்து கொள்ளுங்கள் என சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள கோசாலையில் கடந்த 15-ஆம் தேதி (15.01.2025) அன்று மாட்டுப்பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கோமியம் குறித்து அவர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கோமியம் சிறந்த மருத்துவ குணத்தைக் கொண்டது. காய்ச்சலைக் குணமாக்கும். பாக்டீரியா பாதிப்பு, பூஞ்சை பாதிப்புகளுக்கு எதிராகக் கோமியம் செயல்படக் கூடியது. மேலும் இது, செரிமான கோளாறு உள்ளிட்ட உடல் பாதிப்புகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது” எனப் பேசியிருந்தார். இதற்கு அமைச்சர் பொன்முடி, கார்த்திக் சிதம்பரம் எம்.பி. மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அறிவியல் பூர்வமாக அவர் நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்திய நிலையில் அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காமகோடி, “கோமியத்தில் மருத்துவ குணங்கள் உள்ளது என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அமெரிக்காவில் வெளியான இதழ்களில் கோமியத்தில் எதிர்ப்பு சக்தி உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராக குணங்கள் கோமியத்தில் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அன்றைய பொங்கல் விழாவில் இயற்கை விவசாயம் இயற்கை எரிவாயு மற்றும் கோமியம் தொடர்பாக பேசியதில் தான் இந்த விவாதம் எழுந்துள்ளது. அமேசானில் கூட இது தொடர்பான பஞ்சகவ்யா என்ற பொருள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் அரசியல் தொடர்பாக வரும் விவாதங்கள் பற்றி நான் பதில் அளிக்க விரும்பவில்லை, இது மிகவும் அறிவியல் பூர்வமானது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இது தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரத்தை நான் நிரூபிக்க தயாராக இருக்கிறேன். கோமியத்தை அருந்தினால் உடல்நல அபாயங்கள் ஏற்படும் என வெளிவந்துள்ள ஆராய்ச்சி தரவுகள் குறித்து நான் படிக்கவில்லை. இது தொடர்பான விவாதம் எழுந்து உள்ளதை நான் நேர்மறையாக பார்க்கிறேன். இது தொடர்பாக ஐஐடி மெட்ராஸில் ஆராய்ச்சி மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படும். இந்திய அளவில் இந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. வருஷத்தில் எங்களுக்கு பண்டிகை வரும்போது நாங்கள் பஞ்சகவியம் சாப்பிடுகிறோம். நானும் பஞ்சகவியம் சாப்பிடுவேன்” என்றார்.