கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது : எம்.எல்.ஏ. பதவி பறிபோகுமா?

 
1

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், முறையற்ற வகையில் நடந்து கொண்டதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) மாலை கைது செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரிஷ்டி சிங் தலைமையிலான குழுவினர், சென்னை நிர்வாகப் பிரிவு காவல்துறைத் தலைவர் காமினி மேற்பார்வையில் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி நவம்பர் 23-ஆம் தேதி தலைமைச் செயலாளரிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் (POSH) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விரைவு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட அதிகாரி வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்தும், கைப்பேசி மற்றும் தொடர்புடைய தகவல்களை ஆய்வு செய்ததைத் தொடர்ந்தும் எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படும் விவரம் குறித்துக் காவல்துறை, நீதிமன்றம் மற்றும் சிறை நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் சட்டமன்றச் சபாநாயகருக்கு முறைப்படித் தகவல் தெரிவிக்கப்படும். இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக 201 சமூக ஊடகப் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், POSH சட்ட வரம்புக்குட்பட்ட தகவல்களைச் சமூக ஊடகங்களில் வெளியிடக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற வேண்டும் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

சட்ட நடைமுறைகளைப் பொறுத்தவரை, சட்டமன்ற அவைக்கு வெளியே நடைபெறும் குற்ற வழக்குகளுக்காக ஒரு சட்டமன்ற உறுப்பினரைச் சபாநாயகரால் தன்னிச்சையாகத் தகுதி நீக்கம் செய்யவோ அல்லது சஸ்பெண்ட் செய்யவோ முடியாது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, குற்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில்தான் அந்த உறுப்பினரின் சட்டமன்ற உறுப்பினர் பதவி தகுதி நீக்கத்திற்கு உள்ளாகும். எனவே, நீதிமன்றத்தில் தகுதி நீக்கத்திற்கான சட்ட விதிகள் அமலாகும் வரை அவரது பதவி தொடரும் எனச் சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.