‘என் மேல தப்பில்ல... நான் ராஜினாமா செய்ய மாட்டேன்!’- கள்ளக்குறிச்சி எம். எல். ஏ
'என் மேல தப்பில்ல... நான் ராஜினாமா செய்ய மாட்டேன்!’ என கள்ளக்குறிச்சி எம். எல். ஏ அருள் விக்னேஷ் கூறியுள்ளார்.

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், முறையற்ற வகையில் நடந்து கொண்டதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) மாலை கைது செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரிஷ்டி சிங் தலைமையிலான குழுவினர், சென்னை நிர்வாகப் பிரிவு காவல்துறைத் தலைவர் காமினி மேற்பார்வையில் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி நவம்பர் 23-ஆம் தேதி தலைமைச் செயலாளரிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் (POSH) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஜாமின் கோரி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மனு அளித்துள்ளார்.
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பித் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷை, கட்சிக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரைத் துடைக்கும் வகையில் பதவியை ராஜினாமா செய்ய கட்சித் தலைமை அழுத்தம் கொடுத்து வருவதாகவும், ஆனால் ‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை' எனக் கூறி அவர் ராஜினாமா செய்ய மறுப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

