கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம்: பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் கைது நிச்சயம் – அமைச்சர் எச்சரிக்கை!
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவாகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால் எந்த பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் (கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை குறிப்பிடுகிறார்) மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறி உள்ளார்.
சட்டம் ஒழுங்கை பொறுத்தவரை முன்பை விட இப்போது காவல்துறை ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. திட்டமிட்டு, இதுபோன்று குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மக்களுக்கு பாதுகாப்பை காவல்துறை தொடர்ந்து வழங்கும்.கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு அடிப்படை காரணமே நெடுநாட்களாக இருக்கும் போதை கலாசாரம். அதை வேரோடு சாய்க்க, உளவுத்துறை தகவல்களை கொண்டு ரெய்டுகள் நடக்கின்றன. போதை ஒழிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு மேம்படுத்தப்படும்.கடந்த காலங்களில் நடந்துவிட்டது என்பதற்காக நாங்களும் கண்டு கொள்ளாமல் இருக்கமாட்டோம்.
முன்பை விட காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளோம். கடந்த காலத்தை ஒப்பிடுவது எங்கள் நோக்கமல்ல. யார் தவறு செய்தாலும் காவல்துறை போய் கைது செய்யலாம். காவல்துறை அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.போதை பொருட்கள் 40 கை மாறித்தான் குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்கிறது. அதை நூல் பிடித்த மாதிரி தான் அனைவரையும் பிடிக்க கொஞ்சம் காலம் பிடிக்கும். அவர்களை பிடிக்க முன்பை விட வேகமாக திட்டமிட்டு பணியாற்றுகின்றனர். போதை பொருள் எங்கெல்லாம் கிடைக்கிறதோ அங்கே சென்று நடவடிக்கை எடுத்து வருகிறோம்.வரலாற்று சிறப்புமிக்க கன்னிமரா நூலகத்தில் 523 போலி புத்தகங்களை நான் பறிமுதல் செய்தேன். ஆயுதங்களை பிடிப்பது போன்று, கள்ள ரூபாய் நோட்டுகளை பிடிப்பது போல, போதை பொருட்களை பிடிப்பது மாதிரி கள்ள புத்தகங்களை பிடித்தது வேதனையாக இருக்கிறது.ஏஐ மூலம் கள்ளப்புத்தகங்களை உருவாக்கி தமிழகம் முழுவதும் கொண்டு போய் சேர்த்துள்ளனர். அதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.
லஞ்சஒழிப்புத் துறையில் புகார் அளித்து, நடவடிக்கை வேகம் எடுத்துள்ளது. குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.ஒரு தவறான பதிப்பகத்தினரால் மற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது. டிசம்பரில் புதிய புத்தகங்கள் நூலகங்களில் வாங்கப்படும். என்னென்ன புத்தகங்கள் வாங்க வேண்டும் என்பதற்காக ஒரு குழு உருவாக்கப்படும். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.அரசியலுக்கு அப்பாற்பட்டு எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் இதில் இருப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.

