"கள்ளக்குறிச்சி வன்முறையில் ஈடுபடுவோர்கள் மீது நடவடிக்கை" - டிஜிபி சைலேந்திரபாபு

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக ஐந்து நாட்களாக மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அத்துடன் அங்கு இருந்த காவல்துறையினர் மீதும் கண்ணாடி பாட்டில் , கற்கள் கொண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டனர் . இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்நிலையில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது , கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளிக்கூடத்தில் மாணவி இறப்பு தொடர்பாக உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக என்ன நடந்தது என்பதை பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறியிருக்கிறோம். இறந்து போன மாணவரிடம் இருந்து ஒரு கடிதத்தையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது. பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளோம் . நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த சூழலில் இது போன்ற கூட்டத்தைக் கூட்டி ஒரு சிலர் தனியார் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை தடுப்பதற்கு காவல்துறை எவ்வளவு முயற்சி செய்தும் காவல்துறையினர் மீது அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர் .இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர்.
காவலர்கள் ,காவல்துறை வாகனங்கள், பள்ளிக்கூடத்தை தாக்குவது, சூறையாடுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கலவரத்தில் ஈடுபட்ட அனைவரும் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் . வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.