கலாஷேத்ரா பாலியல் புகார்- 162 மாணவிகளுக்கு சம்மன்

 
கலாஷேத்ரா ஆசிரியர்களை உடனடியாகக் கைது செய்க - சீமான் வலியுறுத்தல்..

அடையாறு கலாக்ஷேத்ரா மாணவிகள் பாலியல் புகார் விவகாரம் தொடர்பாக மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்த மாணவிகளுக்கு சம்மன் அனுப்பி அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

கலாஷேத்ரா குமாரி

கடந்த மார்ச் மாதம் அடையாறு கலாக்ஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் ஹரி பத்மன் என்ற பேராசிரியர் கைது செய்யப்பட்டார். ஹரி பத்மன் மட்டுமல்லாது மேலும் சில ஊழியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாகவும் ஜாதி ரீதியாக பாகுபாடு பார்ப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை மாணவிகள் முன் வைத்தார்கள்.

இது தொடர்பாக மாநில மகளிர் ஆணையமும் தலையிட்டு விசாரணை நடத்தியது. அவ்வாறு விசாரணை நடத்திய போது நூற்றுக்கணக்கான மாணவிகள் புகார் அளித்தனர். புகார்கள் அளிப்பதற்காக ஈமெயில் முகவரியும் மாநில மகளிர் ஆணையம் கொடுத்திருந்தது. இவ்வாறாக பாதிக்கப்பட்ட மாணவிகள் 162 பேர் புகார் அளித்திருந்தனர். இந்தப் புகார்கள் தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் சென்னை காவல் துறைக்கு பரிந்துரை செய்தது.

புகார் அளித்த மாணவிகளின் விபரங்களை பெற்று அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் முதற்கட்டமாக 15 மாணவிகளை அழைத்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். மாணவிகளுக்கு எவ்வாறு பாலியல் தொந்தரவு நிகழ்ந்தது,  ஆகியவை தொடர்பாக மாணவிகளிடம்  பெறப்படும் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.