கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று திறப்பு!
கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்கிறார்.

மதுரை மாவட்டம் புதுநத்தம் சாலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ரூபாய் 134 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது . மேலும் 60 கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில் 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்நூலகம் கன்னியாகுமரியில் தொடங்கி தென் மாவட்டங்கள் முழுவதில் இருந்தும் மாணவர்கள், பல்துறை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 8 தளங்களில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு நூலகத்தில், அடித்தளத்தில் வாகன நிறுத்தத்துமிடம், தரை தளத்தில் வரவேற்பு அரங்கம், தமிழர் பண்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாட்டு கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு ஆகியவையும், முதல் தளம் முதல் ஆறாம் தளம் வரை இரண்டு லட்சத்திற்கும் மேலான நூல்களுக்கான பிரிவுகளும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை இன்று மாலை திறந்து வைக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். கலைஞர் நூற்றாண்டு நூலகமானது குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டி தேர்வுக்கு தயாராவோர் , பெண்கள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறை சார்ந்த வெளிவந்த தமிழ் , ஆங்கில நூல்கள் அந்தந்த துறைகளில், சிறந்து விளங்கும் வல்லுனர்களைக் கொண்ட குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.


