கட்சி மாறியும் தீராத கடம்பூர் ராஜூ பஞ்சாயத்து! கோவில்பட்டியில் பரபரப்பு

 
ச்

கோவில்பட்டி அ.தி.மு.க ஆலோசனை கூட்டத்தில் கடம்பூர் ராஜுவை கண்டித்து பேசிய நிர்வாகிகளால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 


தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகிலுள்ள சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கடம்பூர் ராஜூ.  இவர் அடிப்படையில் ஒரு இடைநிலை ஆசிரியர்.  அதே ஊரில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த இவர், எம்.ஜி.ஆர் மீதுள்ள பற்றினால் ஆசிரியர் பணியிலிருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்து முழுநேர அரசியல்வாதி ஆனார். கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, 2016-ம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டு வெற்ற பெற்ற அவருக்கு தமிழக அமைச்சரவையில் செய்தி மக்கள் தொடர்பு மற்று விளம்பரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு மூன்றாம் முறையாக மீண்டும் எம்.எல்.ஏ., ஆனார். தற்போது அதிமுக பல்வேறு அணிகளாக பிளவுப்பட்டிருக்கும் சூழலில் கடம்பூர் ராஜூ அண்மையில், தவெகவில் இணைந்தார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்லாமல், கோவில்பட்டியில் நடந்த இன்றைய அ.தி.மு.க ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நிகழ்ச்சி மேடையில், கடம்பூர் ராஜூவை கடுமையாக விமர்சித்து பேசிய அதிமுக நிர்வாகிகளுக்கும், மற்றொரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை மூத்த நிர்வாகிகள் சமாதானம் செய்ய முயற்சித்தனர். மேலும் கட்சியை விட்டு போனவரை பற்றி பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய போலீசார், இரு தரப்பையும் சமாதானம் செய்துவைத்தனர்.