"சீமான் விளம்பரத்திற்காக அரசியல் செய்கின்றார்"- கடம்பூர் ராஜூ

சீமான் விளம்பரத்திற்காக அரசியல் செய்கின்றார், திராவிட பாரம்பரியத்தின் பிதாமகனாக தந்தை பெரியார் இருந்தார், சீமான் சுய விளம்பரத்திற்காக சொல்லும் கருத்தாக தான் நாங்கள் பார்க்கிறோம் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
ராமேஸ்வரம் நகராட்சியில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அன்றாட மக்கள் பயன்படுத்தி வெளியேற்றுகின்ற கழிவு நீரை வெளியேற்றுவதற்கு பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றாமல் கிடப்பில் கிடந்து வருவதாலும் இதனால் கழிவு நீரை வெளியேற்ற முடியாமல் கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டு வருவதோடு, ராமேஸ்வரம் டோல்கேட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக நகராட்சி ஊழியர்களை வைத்து வசூல் செய்த பணத்தை முறையாக கணக்கு காட்டாமல் முறைகேட்டில் ஈடுபட்டது. ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குடிசை வீடுகளுக்கு அதிகப்படியான வீட்டு வரிகளை விதித்து வசூலி ஈடுபடுவதை கண்டித்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் இல்லாததால் நோயாளிகள் அவதி அடைந்து வருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னால் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் அதிமுகவினர் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, “சீமான் ஒரு விளம்பரத்திற்காக அரசியலுக்கு வந்துள்ளார். தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்திற்கு வித்திட்டவர், விதைத்தவர். தமிழ் மண்ணிலே உள்ள ஒவ்வொருவரும் உணர்வார்கள் பெரியாரை பற்றி விமர்சிப்பது யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பெரியாரை சீமான் விமர்சித்தார் என்றால் ஈரோடு மண்ணிலே தேர்தல் நடக்கிறது. பெரியாரைப் பற்றி பேசினால் தான் நம்மை திரும்பி பார்ப்பார்கள் என்று அற்பத்தனமான அரசியலை செய்கின்றார். இது தமிழக மக்களிடம் எதிர் விளைவை தான் ஏற்படுத்தும். திராவிட பாரம்பரியத்தின் பிதாமகனாக தந்தை பெரியார் இருந்தார். அதில் இருந்து தான் திராவிட கழகம் வந்தது. அதிலிருந்து தான் திராவிட முன்னேற்றக் கழகம் வந்தது. அதில்இருந்து தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வந்தது. இது நிதர்சனமான உண்மை வரலாற்றை யாரும் மாற்ற முடியாது. சீமான் சொல்வது சுய விளம்பதற்காக சொல்லும் கருத்தாக தான் நாங்கள் பார்க்கிறோம்” என்றார்.