கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை - கடம்பூர் ராஜூ
கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு கச்சத்தீவு, காவேரி, முல்லைப் பெரியாறு, நீட் தேர்வு விலக்கு, எய்ம்ஸ் மருத்துவமனை, என்எல்சி உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தவில்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக கடம்பூர் ராஜூ தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் அதிமுகவிற்கு மிக முக்கியமானது; அதிமுகவிற்கு இது சாதகமான களமாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு கச்சத்தீவு, காவேரி, முல்லைப் பெரியாறு, நீட் தேர்வு விலக்கு, எய்ம்ஸ் மருத்துவமனை, என்எல்சி உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தவில்லை. பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து விட்டார்கள் என்று கோபம் திமுக மீது மக்களிடம் உள்ளது; இந்த இரண்டுமே தேர்தல் களத்தில் அதிமுகவிற்கு சாதமாக உள்ளது.
அரசியல் லாபத்திற்காக திமுக பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது; அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிக அழுத்தம், திருத்தமாக சொல்லிவிட்டார் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று. பாஜக-வை விமர்சிக்க அதிமுகவுக்கு எந்த தயக்கமும் இல்லை தேர்தல் கூட்டணி அமையும் நேரத்தில் அனைத்து அரசியல் பார்வையாளர்களும் ஆச்சரியப்படும் அளவிற்கு அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும். மோடி, நட்டா-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக ஒன்றாக தான் இருக்கிறது. ஓபிஎஸ் தான் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். கட்டுக்கோப்போடு அதிமுக ஒன்றுபட்டு ஒரு இயக்கமாகதான் இருக்கிறது. தான் நீக்கப்பட்டதால் வெறுப்பில் ஓபிஎஸ் பேசுகிறார் என கூறினார்.