கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடக்கம்..

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்க உள்ளதை அடுத்து, ராமேஸ்வரத்தில் இருந்து 72 படகுகளில் 2400 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ராமேஸ்வரத்திலிருந்து 12 க.மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது தான் கச்சத்தீவு. பாக்ஜலசந்தி கடற்பரப்பில் அமைந்துள்ள இந்த கச்சத்தீவுக்கு, ராமேசுவரத்திலிருந்து சுமார் 2.5 மணி நேரத்தில் சென்று விடலாம். அதேபோல் இலங்கையின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்தில் கச்சத்தீவை அடையலாம். இந்தக் கச்சத்தீவில் 1913ம் ஆண்டு புனித அந்தோணியார் தேவாலயம் நிறுவப்பட்டது. இயற்கைச் சீற்றம், புயல் போன்ற பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் புனித அந்தோணியாருக்கு வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம்.
கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டுவிட்ட போதிலும், அந்தோணியார் தேவாலத்தில் வழிபட இந்தியர்களுக்கும் அனுமதி உண்டு. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் கச்சத்தீவு திருவிழாவிற்கு இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து 5000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அந்தவகையில் இந்த ஆண்டு இன்றும் , நாளையும் ( மார்ச் 3, 4) கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயப் பெருவிழா நடைபெறுகிறது.
இதனையொட்டி, ராமநாதபுரத்தில் இருந்து கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு 60 விசைப்படகுகள் 12 நாட்டு படங்களில் சுமார் 2,400 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இன்று மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் அந்தோணியார் பெருவிழா தொடங்குகிறது. அதனை தொடர்ந்து திருச்செபமாலை, திருச்சிலுவை பாதை தியானம், நற்கருணை ஆராதனை, திருச்சொரூப பவனி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுவதுடன், நாளாஇ ( மார்ச் 4) காலை 7 மணிக்கு திருச்செபமாலை, திருவிழா திருப்பலி, திருசொரூப ஆசீருடன் திருவிழா நிறைவுபெறுகிறது.