ஜனாதிபதி எஸ்.சி., எஸ்.டி., சமூகத்தவர் என்பதால் புறக்கணிப்பா?- கி.வீரமணி

 
k veeramani

நாடாளுமன்ற புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுவதாக இருந்தாலும் சரி, திறப்பு விழாவாக இருந்தாலும் சரி, பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான் தகுதியானவரா? ‘‘தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தவர் என்ற காரணத்தால், மேனாள் குடியரசுத் தலைவர், இந்நாள் குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்படுவதா? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்  கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

Draupadi Murmu President of India Caste, Family, Husband, Education and  Children

இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “டில்லியில், புதிய நாடாளுமன்றக் கட்டடம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மூன்று ஆண்டுகளுக்குமுன் பிரதமர் மோடி அவர்களாலேயே அடிக்கல் நாட்டப்பட்டது, வருகின்ற 28.5.2023 அன்று திறப்பு விழாவும் பிரதமர் மோடி அவர்களாலேயே நடத்தப்பட இருக்கிறது. (அத்தேதியை அவர் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், அது வி.டி.சவர்க்கார் அவர்களின் பிறந்த நாளாகும்).

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அன்று அவமதிக்கப்பட்டார்.

இந்திய நாட்டின் விடுதலையின் 75 ஆம் ஆண்டையொட்டியது இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் சாதனை என்று காட்டவே டில்லியில் இப்படி ஒரு பிரம்மாண்ட கட்டட ஏற்பாடு. மூன்று ஆண்டுகளுக்குமுன்பு குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் அவர்களை அந்த அடிக்கல் நாட்டு விழாவில், அடிக்கல்லில் பெயர் பொறிக்கும் அளவுக்கு எந்த முக்கியத்துவ நிகழ்ச்சியிலும் பங்குபெறாத நிலையைக் கண்டித்து, பல பத்திரிகையாளர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் அப்போதே சுட்டிக்காட்டினர். அசையவில்லை ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. அரசு! குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடும்பத்தாருடன் பூரி ஜெகந்நாதர் கோவிலும், புஷ்கர் பிரம்மா கோவிலுக்கும் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டதுண்டே - அதன்மீது இதுவரை ஏதும் நடவடிக்கை உண்டா?

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவரை எவ்வளவு பெரிய உயர் பதவியில் நாங்கள் கொண்டு வந்து அமர்த்தியிருக்கின்றோம் என்று நியமனத்தின்போது கூறிய பா.ஜ.க. பிரதமரோ, மற்றவர்களோ இதுபோன்ற எல்லா காலத்திலும், வரலாற்றுக் குறிப்பாக இருக்கவேண்டிய நிகழ்வில் அவர்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளார்களா?
இந்திய அரசமைப்புச் சட்டப்படி, குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் - (முதல் குடிமகன் என்ற முறையிலும்) முக்கிய அங்கம் வகிக்கும் தலைவர் அல்லவா? (அரசமைப்புச் சட்டம், 79 ஆவது பிரிவு). மேலும் தற்போதுள்ள குடியரசுத் தலைவர் பழங்குடி சமூகத்தைச் சார்ந்த ஓர் பெண்மணி ஆவார்; அவரை இந்த நிகழ்வில் புறக்கணிப்பதுபோல, விழாவில் எந்தப் பங்களிப்பையும் தராமல் நடத்துவது எவ்வகையில் ஜனநாயகத்தில் பொருந்தும் என்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? நியாயந்தானே!

Dravidar Kazhagam leader K Veeramani slams Rajinikanth for Periyar remarks  | Chennai News - Times of India

பிரதமரே அடிக்கல் நாட்டுவார் - பிரதமரே திறந்தும் வைப்பார்!


பிரதமர் மோடி அவர்களே அடிக்கல் நாட்டினார்; அவரே திறந்து வைக்கிறார் என்பதேகூட, ஏதோ திறப்பு விழாவிற்கே நாட்டில் தலைவர்களுக்குப் பஞ்சம் - பற்றாக்குறை என்று புரிந்துகொள்வதா? அல்லது ஒரே நாடு, ஒரே தலைவர் என்று புரிந்துகொள்வதா? ஜனநாயக நாடு அல்லவா இது என்று எளிதில் கேள்வி எழாதா?
கடந்த 4 ஆண்டுகளுக்குமேல் மக்களவையில் துணை சபாநாயகர் (Deputy Speaker) பதவி - அது எதிர்க்கட்சியில் இருக்கும் ஒருவரைத் தேர்வு செய்யும் மரபு உள்ளதால், ஒரு 5 ஆண்டே முடிந்த - 6 மாதங்களில் பொதுத் தேர்தல் நடத்தப்படவிருக்கும் நிலையிலும், நிரப்பப்படாது, நாடாளுமன்றத்தின் கூட்டங்கள் நடந்துகொண்டே வரும் ஒருவகையான ‘விசித்திர ஜனநாயகத்தில்’ நாம் வாழுகிறோம்! அதனால் இப்படியெல்லாம் நடப்பதுபற்றி பேசுவது, எழுதுவதுகூட ஆளுங்கட்சியால் சகித்துக் கொள்ளப்பட முடியாத அவலம் இது.

வாக்கு வங்கிக்காக மட்டும்தானா அம்பேத்கரும் - காந்தியாரும்?


பழங்குடியினத்தவரை (Aborigines) என்ற பூர்வ குடிமக்கள் என்ற பெயரையே மாற்றி, ‘‘வனவாசிகள்’’ - காட்டுவாசிகள் என்று ‘நாமகரணத்தை’ ஆர்.எஸ்.எஸ். சூட்டி, அவர்களைக் கொச்சைப்படுத்தும் நிலையே உள்ளது வேதனையும், வெட்கமும் படவேண்டிய ஒன்று! வாக்கு வங்கி அரசியலுக்கு ஒரு பக்கத்தில் அம்பேத்கர்; மற்றொரு பக்கத்தில் காந்தி; இப்படிப் பலப் பல தேர்தல் உத்திகளும், வித்தைகளும் கைவந்த கலைகள் அவர்களுக்கு.

எல்லாவற்றிற்கும் பதில் 2024 மக்களவைத் தேர்தல்


எல்லாவற்றிற்கும் ஒரே பதில், 2024 பொதுத் தேர்தல் முடிவுகள் - இமாச்சல, கருநாடகத் தேர்தல் முடிவுகள்போல மக்கள் தீர்ப்பு அமைந்தால் ‘‘ஜனநாயகம்‘’ பிழைக்கும்; இன்றேல் அகராதியில்தான் அதனைத் தேடவேண்டிய புதிய நெருக்கடி நிலை வந்து குதிக்கும்! 19 கட்சிகள் புறக்கணிப்போடு நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு நிகழ்ச்சி நடந்தால், அது தேசிய அவமானமாக கருதப்படாதா? குடியரசுத் தலைவரின் முக்கியத்துவத்தையும் காணாமற் போகச் செய்யும் இம்மாதிரி நிகழ்வுகள் அதற்கான முன்னோட்டமே என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.