திட்டமிட்டே அண்ணாமலை அதிமுக தலைவர்களை இழிவாக பேசி வருகிறார் - கி.வீர்மணி

 
k veeramani

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டமிட்டே தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் அ.தி.மு.க. தலைவர்களை இழிவாக பேசி வருகிறார் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவை பற்றி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  நாங்கள் தெய்வமாக வணங்கும் அண்ணாவை சிறுமைப்படுத்தும் வகையில் பேசியதை பொறுத்துக் கொள்ளவே முடியாது. பாஜகவால் இங்கு காலூன்றவே முடியாது. எங்களவை வைத்து தான் உங்களுக்கு அடையாளமே கிடைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. தேர்தல் வரும்போது அதுபற்றி முடிவெடுத்துக்கொள்ளலாம். எங்கள் கூட்டணியில் பாஜக இல்லை. இதுதான் எங்கள் முடிவு. இது என் தனிப்பட்ட கருத்து இல்லை, இது கட்சியின் ஒட்டுமொத்த முடிவு. இனி அண்ணாமலை எங்கள் தலைவர்களை விமர்சித்தால், கடுமையான எதிர்ப்பை சம்பாதிப்பார் என கூறினார். 

annamalai k veeramani

இந்த நிலையில், அண்ணாமலை திட்டமிட்டே அதிமுக தலைவர்களை அவமதித்து வருவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்பது போன்ற செய்திகள் நேற்று தொலைக்காட்சி ஊடகங்களில் முதலிடம் பிடித்துள்ளன. பாஜகவின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலை திட்டமிட்டே திராவிடர் இயக்கத்தையும், ஆட்சியையும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் அ.தி.மு.க. தலைவர்களையும் இழிவாக பேசி வருகிறார். விளம்பர வெளிச்சம் கிடைக்கும் என்பதற்காக இந்த விபரீத வேலையில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக என்ற அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி பாஜகவுடன் உறவை உறுதி செய்தால், அதைவிட மிகப்பெரிய அரசியல் விபத்து வேறு இருக்க முடியாது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.