உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளான ஆளுநரை ‘டிஸ்மிஸ்’ செய்க - கி.வீரமணி வலியுறுத்தல்

 
k veeramani

உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளான ஆளுநரை மத்திய அரசு ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.  

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு (தி.மு.க.) அரசு  நிறைவேற்றி அனுப்பும் மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்காமலும், திருப்பி அனுப்பாமலும், திசை திருப்பும் வகையிலும், அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகள் பலவற்றிற்கு எதிராக – தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்த பதவிப் பிரமாண உறுதிமொழிக்கு முற்றிலும் மாறாகவும், முரணாகவும் நடந்துகொள்வதுபற்றி, அவரது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து, அவர் தனக்கு இல்லாத அதிகாரங்களைப் பயன்படுத்துவது முறைகேடு – அரசமைப்புச் சட்ட விரோதம் – இதற்கு உச்சநீதிமன்றம் நியாயம் வழங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு வாதாடியது  தி.மு.க. அரசு. இதை விசாரித்து, இன்று (8.4.2025) காலை உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் ஜஸ்டிஸ் பர்திவாலா, ஜஸ்டிஸ் மகாதேவன் ஆகியோரைக் கொண்ட அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பின்படி (தற்போது ஊடகச் செய்திகள் வாயிலாக அறிந்துகொள்ளும் நிலையில்), முழு தீர்ப்புப்பற்றி பிறகு விரிவான அறிக்கை  – அதனை முழுமையாகப் படித்துத் தருவோம் என்றாலும், தற்போது வந்துள்ள செய்திப்படி தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நிலைப்பாடு சரியானதே என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில் இன்றையத் தீர்ப்பு அமைந்துள்ளது.
  

இதன்படி, தனக்கு இல்லாத அதிகாரத்தை, இருப்பதாகக் கருதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் சட்ட வலிமைக்கு, ஆட்சிக்கு எதிராக இதுவரை நடந்துகொண்டுள்ள ஆளுநரை, குடியரசுத் தலைவர்  ‘டிஸ்மிஸ்’ (திரும்பப் பெறவேண்டும்) செய்யவேண்டும் அல்லது அவரே ‘ராஜினாமா’ செய்து, வெளியேறவேண்டும் என்பதுதானே பொருள்! அஃதின்றி, இந்த ஆளுநர் செயல்பாடுகள்பற்றி  பேரறிவாளன் போட்ட வழக்கில், முன்பே உச்சநீதிமன்றத்தின் கண்டனமும் இத்துடன் நினைவிற் கொள்ளவேண்டிய ஒன்று என்பதால், தமிழ்நாட்டில் இந்த ஆளுநர் பதவியில் நீடிக்கும் ஒவ்வொரு வினாடியும், அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு முற்றிலும் எதிரான முன்னுதாரணமாகிவிடக் கூடும் ஆதலால் ஒன்றிய அரசும், மக்கள் மன்றமும் புரிந்து, இனி செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்! இத்தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்தின் விதிகளை சரியானபார்வையுடன் பின்பற்றவேண்டிய ஒரு வரலாற்று முக்கியம் வாய்ந்த நடைமுறை இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுத் தீர்ப்பினை (Historical Landmark Judgement) வழங்கிய மாண்புமிகு உச்சநீதிமன்றத்தையும், அதன் மாண்பமை  நீதிபதிகள், ஜஸ்டிஸ் பர்திவாலா, ஜஸ்டிஸ் மகாதேவன் ஆகியோரையும் பாராட்டுகின்றோம்!
 

இந்தத் தீர்ப்புமூலம் இந்தியா முழுமைக்கும் உள்ள மாநில சட்டப்பேரவைகளின் அதிகாரத்தைக் காப்பாற்றி, தடம்புரண்ட ஜனநாயகத்தை மீண்டும் தடத்தில் ஏற்றிய தனிப்பெரும் சாதனையைச் செய்த நமது ‘திராவிட மாடல்’ அரசின் ஒப்பற்ற முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. இதன் பயன் இந்தியாவின் அனைத்து மாநில சட்டப்பேரவைகளின் உரிமை காப்பாற்றப்பட்டு, ஜனநாயகம் பிழைத்துள்ளது. பல பல்கலைக் கழகங்களுக்கும் ஒரு விடியல் இதன்மூலம் கிடைக்கும் என்பது உறுதி என குறிப்பிட்டுள்ளார்.