பழைய முறையில் மானியம் வழங்கி ஒரு சிலிண்டர் ரூ.300-க்கு விற்பனை செய்க: கே.பாலகிருஷ்ணன்

பாஜக ஆட்சிக்கு வந்தபின் சிலிண்டர் மானியம் வெட்டப்பட்டு, ரூ.1120 வரை கடுமையாக விலை ஏற்றப்பட்டதாக சி.பி.ஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமையல் எரிவாயு உருளை விலையை ரூ.200 குறைப்பதாக மோடி அரசாங்கம் அறிவித்துள்ளது. எரிவாயு உள்ளிட்டு அனைத்துப் பொருட்களின் விலையையும் கட்டுக்கடங்காமல் உயர்த்திவிட்டு, இப்போது நடத்துவது ஏமாற்று நாடகமே என்பதை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது. 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.450 என்ற அளவில் இருந்தது, அப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 102 டாலர்களாக இருந்தது. அதற்கு சில மாதங்கள் முன் உச்சமாக கச்சா எண்ணெய் விலை 150 டாலர்கள் சென்றபோதும் கூட பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்றுள்ள அளவுக்கு ஏற்றப்படவில்லை.
பாஜக ஆட்சிக்கு வந்தபின் சிலிண்டர் மானியம் வெட்டப்பட்டு, ரூ.1120 வரை கடுமையாக விலை ஏற்றப்பட்டது. இந்த காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதள பாதாளத்தில் சரிந்த பிறகும் கூட விலை கொள்ளை நிற்கவில்லை. மோடி அரசாங்கத்தின் இத்தகைய நாசகர கொள்கைகளால் வரலாறு காணாத விலை ஏற்றம் உருவாகியுள்ளது. அண்மையில் தக்காளி விலை பல மடங்கு உயர்ந்த போது, பாஜக அதனை கைகட்டி வேடிக்கை பார்த்ததுடன், மறுபக்கம் வகுப்புவாத வன்முறைகளுக்கு தூபம் போட்டது. இப்போது, உணவுப் பொருட்களின் பணவீக்கம் 11.5 சதவிகிதம் என்ற உச்ச நிலைக்கு வந்திருப்பதை ரிசர்வ் வங்கியின் விபரங்கள் காட்டுகின்றன. பருப்பு, சமையல் எண்ணெய், பூண்டு, இஞ்சி, கோதுமை என அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. சாமானிய மக்களின் வருவாயில் பெரும்பகுதியை உணவுக்கு மட்டுமே செலவிடுவதால் பொருளாதார நெருக்கடி சூழல் உருவாகியுள்ளது.
இத்தகைய மிக மோசமான நிலைமையை ஏற்படுத்திய ஒன்றிய அரசாங்கம், சிலிண்டர் விலையை ரூ.200 குறைப்போம் என்று சொல்வது புண்ணுக்கு புனுகு தடவும் செயலே தவிர வேறில்லை. அதுவும், எரிவாயு மானியத்தை ரூ. 7 ஆயிரம் கோடி வெட்டிய மோடி ஆட்சி இந்த விலைக் குறைப்பை எத்தனை நாட்கள் தொடரும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. எனவே, பழைய மானிய முறையை அமலாக்குவதுடன், தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 80 டாலர் என குறைவாக இருப்பதால், எரிவாயு சிலிண்டர் விலை ரூ.300 என நிர்ணயித்து வழங்கிட வேண்டும் என சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. விலைவாசி மிகக் கடுமையாக உயர்ந்திருக்கும் சூழலில், பெட்ரோல்-டீசல் மீது ஒன்றிய அரசுக்கு மட்டுமேயான செஸ் வரிகளை முற்றாக நீக்குவதுடன், அரிசி, கோதுமை, மருந்துப்பொருட்கள் உள்ளிட்டு ஜி.எஸ்.டி வரியை நீக்கி அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
வரலாறு காணாத விலையேற்றம் மற்றும் வேலையின்மைக்கு வழிவகுத்துள்ள மோடி அரசின் கொள்கைகளை அம்பலப்படுத்தியும், சிலிண்டர் விலையில் மோடி அரசாங்கத்தின் நாடகத்தை வெட்ட வெளிச்சமாக்கியும் வரும் செப். 1 முதல் 7 வரை சி.பி.ஐ(எம்) வலுவான பிரச்சாரத்தை முன்னெடுக்கிறது. செப்.7 ஆம் தேதி நடக்கவுள்ள மாபெரும் மறியல் போராட்டத்திற்கு மக்கள் பேராதரவு தர வேண்டுமென சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.